மதுரையில் இருந்து பத்ரிநாத் - கேதார்நாத்... IRCTC வழங்கும் அசத்தலான பேக்கேஜ்..!!
ஆன்மீக சுற்றுலா: IRCTC வழங்கும் கோதார்நாத், பத்ரிநாத் சுற்றுப்பயணம் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஜூலை 2 ஆம் தேதி முடிவடைகிறது. மதுரையில் இருந்து ரிஷிகேஷிற்கு திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர்,விஜயவாடா மற்றும் வாரங்கல் ஆகிய இடங்களில் போர்டிங் பாயின்ட்களுடன் 10 ஏசி 3-அடுக்கு பெட்டிகளுடன் பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலை IRCTC இயக்கும்.
ரயில்வே அதிகாரி அளித்த தகவல்: கோதார்நாத் - பத்ரிநாத் டூர் பேக்கேஜின் முக்கிய அம்சங்களை விளக்கிய ஐஆர்சிடிசி, தென் மண்டல குழும பொது மேலாளர் பி. ராஜலிங்கம் பாசு திருச்சியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை, இது குறித்த பல விபரங்களை தெரிவித்தார்.
பேக்கேஜ் கட்டணம்: 12 இரவுகள்/ 13 நாட்கள் சுற்றுப்பயணத்திற்கான "ஸ்டாண்டர்ட்" பிரிவின் கீழ் ஒரு நபருக்கான பேக்கேஜ் விலை ₹58,946 ஆகவும், "டீலக்ஸ்" பிரிவின் கீழ் ₹62,353 ஆகவும் உள்ளது. இந்த பேக்கேஜிற்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டது எனவும் இதுவரை மொத்தம் 100 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ரயில்வே அதிகாரி ராஜலிங்கம் பாசு தெரிவித்தார்.
சுற்றுலா பயண தொகுப்பின் கீழ் 300 சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. உத்தரகாண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரியம், ருத்ரபிரயாக்கிலிருந்து குப்தகாஷி மற்றும் கேதார்நாத் வரை ஹெலிகாப்டர்களில் சுற்றுலாப் பயணிகளை குழுக்களாக அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.
ருத்ரபிரயாக்கிலிருந்து கார்த்திக் சுவாமி கோவிலுக்கு சாலை வழியாக 95 கி.மீ தூரத்தை கடக்க சுமார் நான்கு மணி நேரம் ஆகும். பேக்கேஜ் செலவில் ஹெலிகாப்டர் சவாரி அடங்கும். ரிஷிகேஷ், ருத்ரபிரயாக் மற்றும் ஜோஷிமத் ஆகிய இடங்களில் குளிரூட்டப்படாத ஹோம் ஸ்டேகள்/கெஸ்ட் ஹவுஸ்/பட்ஜெட் ஹோட்டல்களில் இரவு தங்கும் வசதி இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
சுற்றுலா பயணத்தின் போது ரயிலில் காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு (சைவம்) வழங்கப்படும். பயணத்திட்டத்தின்படி நல்ல தரமான உணவகங்கள் / ஹோட்டல்கள் / விருந்துகளில் ஆஃப்போர்டு உணவுகள் (சைவம்) வழங்கப்படும்.
சுற்றுலா பயணத்தின் போது AC அல்லாத பேருந்துகள் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வசதிகள் மேற்கொள்ளப்படும். முன்பதிவுகள் மற்றும் இதர விவரங்களை திருச்சியில் உள்ள IRCTC சுற்றுலா தகவல் மற்றும் வசதி மையங்களை தொடர்பு கொள்ளலாம். திருச்சி (8287932070), மதுரை (8287931977/ 8287932122), கோவை (9003140655), சென்னை (9003140739/8287931964) மற்றும் www.irctctourism.com என்ற இணையதளத்தில் தகவல்களை பெறலாம்.
IRCTC தென் மண்டலம், 2023-2024ல் 15 பாரத் கௌரவ் யாத்திரை ரயில்களை பிரபல சுற்றுலா மற்றும் ஆன்மீக இடங்களுக்கு இயக்கியது. மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்ததாக திரு. பாசு கூறினார். மேலும், சுற்றுலா பயணிகளிடம் இருந்து பேக்கேஜ்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது எனவும் அவர் கூறினார்.