வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன..!!
வீட்டுக் கடன் EMI/வட்டிச் சுமையைக் குறைக்க வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்ற வாடிக்கையாளர்கள் எண்னுகிறார்கள். உங்கள் வங்கி வீட்டுக் கடனுக்கு அதிக வட்டி வசூலித்து வந்தால், நீங்கள் வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றலாம். வீட்டுக் கடனின் ஆரம்ப கட்டத்தில், EMI தொகையில் வட்டிப் பகுதி அதிகமாக இருக்கும். அசல் தொகை மிக குறைவாக இருக்கும். எனவே, குறைந்த வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தற்போதைய காலகட்டத்தில், பல வங்கிகள் 6.70 சதவிகித வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கும் மாற்றுவதில் பல நன்மைகள் உள்ளன. இதில், உங்கள் மீதான EMI சுமையை குறைக்கிறது. கடன் திருப்பிச் செலுத்தும் காலமும் குறையும். இதனால் வட்டியைச் சேமிக்கப்படும். அதே நேரத்தில், வீட்டுக் கடனை மாற்றுவதில், முன்கூட்டியே பணம் செலுத்துதல் அல்லது முன்கூட்டியே கடனை அடைக்கும் வசதி, கடனை திருப்பிச் செலுத்தும் வசதி ஆகியவற்றுக்கான நிபந்தனைகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் போது, கடனை மறுசீரமைப்பு செய்யும் வசதியையும் பெறுவீர்கள். அதாவது, உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் EMI தொகையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றும் போது, பெறும் நன்மைகளில் ஒன்று, நீங்கள் டாப்-அப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தொகையை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு எந்த விதமான தடையும் இல்லை.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வழிமுறைகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் NBFC களும் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பத்தை வழங்குகின்றன. எனவே, வீட்டுக் கடனை வேறு வங்கிக்கும் மாற்றுவதற்கு முன், டாப்-அப் தொகை, திருப்பிச் செலுத்தும் காலம், டோர் ஸ்டெப் சேவை, முன் கூட்டியே கடனை அடைத்தல் அல்லது குறிப்பிட்ட அளவு கடன் தொகையை முன் கூட்டியே செலுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளவும்.
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கும் மாற்ற, அடையாள சான்று, முகவரி சான்று போன்ற KYC ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க வேண்டும். சம்பளச் சீட்டு/படிவம் 16 மற்றும் 6 மாத வங்கி கணக்கு அறிக்கை ஆகியவற்றை வழங்க வேண்டும். சொத்தில் உங்கள் உடைமைக்கான சான்றையும் நீங்கள் வழங்க வேண்டும். நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், பொதுவாக வீட்டுக் கடனின் 12 இஎம்ஐ தொகையை செலுத்திய பின்னரே மற்றொரு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றலாம். இருப்பினும், கடனை வேறு வங்கிக்கு மாற்றுவதற்கு முன், நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகவும்.