மஞ்சுமெல் பாய்ஸ் to பிரேமலு-அதிவேகமாக 100 கோடி கல்லா கட்டிய மலையாள படங்கள்!
மலையாள மொழி படங்களுக்கென தமிழ் திரையுலகில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஒரு சில மலையாள படங்கள், சில வருடங்கள் கழித்தோ அல்லது உடனடியாகவோ வெவ்வேறு மொழிகளில் ரீ-மேக் செய்யப்படுவதுண்டு. அப்படித்தான் த்ரிஷ்யம் படம் தமிழ் மற்றும் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. அதே போல, மலையாளத்தில் வெளியாகியுள்ள படங்கள் பல 100 கோடி கலக்ஷனையும் தொட்டிருக்கிறது.
சமீப சில நாட்களாக, பல இந்திய படங்கள் 100 கோடி வசூலை பெறுவது மிகவும் சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஆனால், மலையாள படங்களை பொறுத்தவரை இது பெரிய விஷயமாகும். ஏனென்றால், இங்கு எடுக்கப்படும் படங்களுக்கென்று பெரிய பட்ஜெட் எதுவும் ஒதுக்கப்படுவதில்லை. இதனால், நல்ல கதைகளுடன் இருக்கும் படங்களை கொஞ்சம் சிரமப்பட்டுதான் தயாரிப்பாளரை பிடித்து ரிலீஸ் செய்கின்றனர். அப்படி குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சமீபத்தில் இரண்டு மலையாள படங்கள் 100 கோடி ஹிட் அடித்தன. அதில் ஒன்று, மஞ்சுமெல் பாய்ஸ்.
சிதம்பரம் எஸ்.பொடுவல் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கியிருந்தார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்த படம் தற்போது உலகளவில் ரூ.166 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், இந்த வசூலை இப்படம், ரிலீஸான 22 நாட்களுக்குள்ளாக ரீச் செய்துள்ளது.
இளசுகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, பிரேமலு. இந்த படம், கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதியன்று வெளியானது. இதனை கிரீஷ் என்பவர் இயக்கியிருக்கிறார். மமிதா பைஜூ, மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம், தற்போது வரை உலகளவில் ரூ.100 கோடியை கலெக்ட் செய்திருக்கிறது.
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், 2018. இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படம், உலகளவில் ரூ.175 கோடி வரை வசூலித்திருந்தது.
மோகன் லால் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம், லூசிபர். இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்தார். இப்படம், உலகளவில் 127 கோடி வரை கலெக்ட் செய்திருந்தது.
2016ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளியான படம், புலி முருகன். இந்த படத்தை வியாசக் இயக்கியிருந்தார். நல்ல விமர்சனத்தை பெற்றிருந்த இப்படம், ரூ.152 கோடி வரை கலெக்ட் செய்திருக்கிறது.