Modi 3.0: கேபினட்டில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் 6 முன்னாள் முதல்வர்கள்... யார் யார் தெரியுமா?
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துகொண்டார்.
அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மற்ற 71 அமைச்சர்களில் 6 பேர் பல்வேறு மாநிலங்களில் முன்னாள் முதல்வர்கள் ஆவார். அவர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம். குறிப்பாக பிரதமரும் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வராவார்.
சிவராஜ் சிங் சௌகான்: இவர் 2005ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பின் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை இவர் அந்த மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்தார். தற்போது முதல்முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
ராஜ்நாத் சிங்: இவர் உத்தர பிரதேசத்தின் முதல்வராக 2000ஆம் ஆண்டு முதல் 2002ஆம் வரை இருந்தார். அதன்பின் வாஜ்பாய் அமைச்சரவையில் 2003 முதல் 2004 வரை விவசாயத்துறை அமைச்சராகவும், 2014 முதல் 2019 வரை உள்துறை அமைச்சராகவும், 2019 முதல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
மனோகர் சிங் கட்டார்: இவர் 2014ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி வரை ஹரியானாவின் முதலமைச்சராக செயல்பட்டார். 18வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன் இவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சர்பானந்தா சோனோவால்: இவர் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக செயல்பட்டார். அதற்கு முன்னரும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்த இவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார். தற்போதும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஹெச்.டி. குமாராசாமி: இவர் கர்நாடகாவின் முதலமைச்சராக 2006ஆம் ஆண்டு பிப். 3ஆம் தேதி முதல் 2007ஆம் ஆண்டு அக். 9ஆம் தேதி வரையும் 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பதவி வகித்தார். இவர் முதல்முறையாக மத்திய அமைச்சரவைக்கு தேர்வாகி உள்ளார்.
ஜிதன் ராம் மஞ்சி: இவர் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 2014ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பதவி வகித்தார். தற்போது முதல்முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.