கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு... செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!
முருகப் பக்தர்கள் (Lord Murugan Devotees) ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதியை நோக்கி விரதம் இருப்பார்கள். அந்த வகையில், கந்தசஷ்டி விரதம் இன்று முதல் தொடங்கி உள்ளது. வரும் நவ.7ஆம் தேதி மகா கந்த சஷ்டி (Maha Kandha Sashti) ஆகும். இன்று இரவு 08:06 மணிக்கு பிரதமை திதி இருப்பதால் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள் இன்று அதிகாலையிலேயே குளித்து, முருகனுக்கு விரதத்தை ஆரம்பித்திருக்க வேண்டும்.
விரதம் (Kandha Sashti Viradham) இருக்கும் நாள்களில் வீட்டில் முருகன் படங்களை சுத்தப்படுத்தி அதில் சந்தனம், குங்குமம் வைத்து மலர்களை கொண்டு அலங்கரிக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், காய்ச்சிய பாலில் தேன் கலந்து அதனை நைவேத்தியமாக வைத்து விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி தினங்களில் விரதமிருப்பது நன்மை அளிக்கும். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது மிக மிக விசேஷம் என நம்பப்படுகிறது. இந்த நேரத்தில், தம்பதி இருவருமே விரதம் கடைப்பிடித்தால், குழந்தை பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
விரதம் இருப்பவர்கள் முருகன் கோயிலில் மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை வீட்டிலும், பணியிடத்திலும் இருக்கலாம். விரதம் இருக்கும்போது சிலர் தண்ணீர் மட்டும் குடிப்பார்கள், சிலர் பால்பழம் மட்டும் சாப்பிடுவார்கள். பக்தர்கள் விரதத்தின்போது முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசம் படிப்பது, திருப்புகழ் உள்ளிட்டவைகளை படிப்பது ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.
சஷ்டி விரத்தின்போது அன்பர்கள் உமிழ் நீரை விழுங்காமல் விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. அது கஷ்டமாக இருந்தால் ஒருமுறை வீதம் 6 கை நீரையும், 6 மிளகையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உப்பு நீர், எலுமிச்சம் சாரு, இளநீர் போன்றவற்றை குடிக்கவே கூடாது.
மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள், முதியோர்கள் விரதம் மேற்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கவும். பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் இந்த விரதத்தை தவிர்க்கலாம். அதேபோல, விரதம் மேற்கொள்பவர்கள், பகல் நேரத்தில் தூங்கவே கூடாது. 7 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பது மிகமிக சிறப்பாகும்.
குழந்தை இல்லாதவர்கள் மட்டுமல்ல, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வேலையில்லாமல் திண்டாடுபவர்கள், வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாமல் தவிப்பவர்கள் கந்தசஷ்டியில் விரதம் இருந்தால் நன்மைகள் விளையும் என நம்பப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஊடக தகவல்கள் மற்றும் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.