மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் கிடைக்குமா, கிடைக்காதா? நிதி அமைச்சகம் அளித்த அப்டேட் இதோ
மத்திய அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் முடக்கப்பட்ட அவர்களது 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை குறித்து நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகையை அளிப்பது குறித்து நிதி அமைச்சகம் ஒரு முடிவை எடுக்கக்கூடும் என நீண்ட நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டு இருந்தன.
18 மாத டிஏ அரியர் தொகை தொடர்பாக பல்வேறு அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நிதி அமைச்சகமே (Finance Ministry) தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் பலமுறை ஊழியர்களுக்கு 18 மாத அரியர் தொகை கிடைக்குமா என்ற கேள்விக்கு, அப்படி எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என்றே நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. மீண்டும், மழைக்கால கூட்டத்தொடரில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக இதற்கு பதில் அளித்துள்ளார்.
இது குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, 18 மாத கால டிஏ நிலுவைத் தொகைக்கான (18 Month DA Arrears) நம்பிக்கையை அழிக்கும் வகையில், அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றின் நிலுவைத் தொகையை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை நிதி அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த கேள்வியை மாநிலங்களவை எம்.பி.க்கள் ஜாவேத் அலிகான் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் எழுப்பினர்.
இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலை இங்கெ காணலாம்: மத்திய அரசு ஊழியர்கள்/ஓய்வூதியம் பெறுபவர்களின் 18 மாத அகவிலைப்படி / அகவிலை நிவாரணம், கோவிட் பரவலின் போது நிறுத்திவைக்கப்பட்டது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறதா? ஆம் எனில், அதன் விவரங்கள் என்ன? இல்லையெனில், அதை வழங்காததற்கான காரணம் என்ன? உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ள நிலையிலும் இதை வழங்காதது ஏன்? 2024 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இது தொடர்பாக பெறப்பட்ட கோரிக்கைகளின் விவரங்கள் என்ன? இவற்றுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
நிதித்துறை இணை அமைச்சரின் பதில்: மற்றும் 4- கோவிட்-19 காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 முதல் செலுத்த வேண்டிய அகவிலைப்படி (DA)/அகவிலைப்படி நிவாரணத்தின் (DR) மூன்று தவணைகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவால் ஏற்பட்ட அசாதாரண சூழலில் அரசாங்க நிதி மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், தேசிய கூட்டு ஆலோசனை பொறிமுறை (NCJCM) உட்பட அரசாங்க ஊழியர்களின் தொழிற்சங்கங்களிலிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட உலகளாவிய மோசமான நிதி தாக்கம் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நலன்புரி நடவடிக்கைகளால் 2020-21 நிதியாண்டுக்குப் பிறகும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், அகவிலைப்படி/அகவிலை நிவாரணத்தின் நிலுவைத் தொகையை அளிப்பது சாத்தியமானதாகக் கருதப்படவில்லை.
டிஏ அரியர் தொகை போலவே, 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் நினைத்த பதில் இன்னும் கிடைக்கவில்லை. 8வது ஊதியக் குழு தொடர்பாக ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தற்போது அரசாங்கம் 8வது ஊதியக்குழுவை பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் நிதிச் செயலர் டிவி சோமநாதன், புதிய ஊதியக்குழு 2026 இல் தான் அமலுக்கு வர வேண்டும், ஆகையால் அதற்கு இன்னும் நேரம் இருக்கின்றது என கூறியுள்ளது சற்று நம்பிக்கையை அளிக்கின்றது.
18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்த செய்தியால், மத்திய ஊழியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும், அவர்களக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியும் ஒன்று உள்ளது. அவர்களது அகவிலைப்படி விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இது ஜூலை 2024 முதல் திருத்தப்படும். ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்கள் மூலம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
இம்முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்படும். இது ஜூலை 1, 2024 முதல் செயல்படுத்தப்படும். இதைத் தொடர்ந்து மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த அகவிலைப்படி/அகவிலை நிவாரணம் 53 சதவீதமாக உயரும். இதனால் பெரிய சம்பள உயர்வு இருக்கும். எனினும், அதற்கான அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இது செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.