கொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்
கடந்த சில வாரங்களாக வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை தொற்றால் உலக மக்கள் பீதியில் உள்ளனர். உலக மக்களாகிய நாம் இப்போதுதான் கொரோனா தொற்றின் வீரியத்தை பார்த்து ஓய்ந்திருக்கிறோம். கொரோனாவுக்கு பிறகு வைரஸ் என்ற வார்த்தையே மனதை ஆட்டிப்படைக்கின்றது. குரங்கு அம்மை பீதியை கிளப்புவதற்கு கொரோனாவின் தாக்கமும் ஒரு காரணம்.
இதற்கிடையில், கொரோனா தொற்றைப் போலவே குரங்கு அம்மைக்கும் நாம் அச்சப்பட வேண்டி இருக்கும் என சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளார்கள். இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பான WHO அவசர நிலையை அறிவித்தது முதல் அனைத்து நாடுகலும் குரங்கு அம்மை குறித்து உஷார் நிலையில் உள்ளன.
ஆப்பிரிக்காவில் துவங்கிய மங்கிபாக்ஸ் என்ற குரங்கு அம்மை உலகின் பல நாடுகளில் பரவி பருகிறது. காங்கோ நாட்டில் தன் கோர முகத்தை காட்டிய இந்த வைரஸ் தொற்று, ஸ்வீடன், பாகிஸ்தான், பிலிபைன்ஸ் என பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. சமீப நாட்களில் இதன் பரவல் அதிகமானதை அடுத்து பல நாடுகள் தங்கள் எல்லைகளில் குரங்கு அம்மைக்கான பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளன.
உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவலை கவனமாக கவனித்து வருகிறது. WHO அதை கிரேடு 3 பிரிவில் வைத்துள்ளது. ஆபத்து பெரியதாக இருந்து, தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தொற்றுகள் கிரேட் 3 -இல் வைக்கப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதைப் போன்றே இந்த வைரஸும் பரவி வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்த ஆண்டு துவக்கம் முதலே, காங்கோ, ருவாண்டா, உகாண்டா, புருண்டி ஆகிய நாடுகளுடன் கென்யாவிலும் குரங்கு அம்மை நோய் மிக வேகமாக பரவத் தொடங்கியது. சமீபத்தில் இந்த வைரஸ் ஆப்பிரிக்காவில் இருந்து முதலில் ஸ்வீடனுக்கும், பின்னர் பாகிஸ்தானுக்கும் இப்போது பிலிப்பைன்ஸுக்கும் பரவியுள்ளது. இதுவரை, ஸ்வீடனில் ஒருவருக்கும், பாகிஸ்தானில் 4 பேருக்கும், பிலிப்பைன்ஸில் 1 நபருக்கும் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் குரங்கு அம்மை பரவல் இல்லை என்றாலும், இந்திய அரசாங்கம் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
உடலில் சீழ் நிறைந்த கொப்புளங்கள், காய்ச்சல், தலைவலி, தசைகளில் வலி, முதுகு வலி, சோர்வு, பலவீனம், தொண்டையில் வீக்கம் ஆகியவை குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதில் அரிப்பு, சொறி ஆகியவவை பொதுவாக முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் தொடர்பு கொள்வதால் குரங்கு நோய் பரவக்கூடும். இது தோல் காயங்களாலும், பாதிக்கப்பட்ட நபரின் தோலோடு மற்றவரின் தோல் தொடர்பில் வருவதாலும், பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் சுவாசிப்பதாலும், பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் பொருட்களான படுக்கை, உடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் பரவுகிறது.
குரங்கு அம்மை வராமல் தடுக்க பொது தூய்மையை கடைபிடிப்பது நல்லது. கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்துவது, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தூரமாக விலகி இருப்பது, உங்கள் தோலில் ஏதேனும் காயம் இருந்தால், அதை மூடி வைப்பது, விலங்குகளுடனான தொடர்பைத் தவிர்ப்பது, பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது, உங்கள் பகுதியில் குரங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகியவை இதற்கான பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.
குரங்கு அம்மை கிளேட் I (Clade I) மற்றும் கிளேட் II (Clade II) என இரண்டு வகைப்படும். இந்த இரண்டு வகைகளில் கிளேட் I மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இது பல தசாப்தங்களாக மத்திய ஆபிரிக்காவின் காங்கோ படுகையில் தன் கோர முகத்தை காட்டி வருகின்றது. கிளேட் II வகையில் தீவிரம் சற்று குறைவாக இருக்கும். மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இது உள்ளது.