ஐபிஎல் மெகா ஏலம்... மும்பை அணி டாட்டா சொல்ல உள்ள 5 ஸ்டார் வீரர்கள் - அவரும் லிஸ்ட்ல இருக்காரு!
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளுள் ஒன்று எனலாம். 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்றது.
ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சற்று பின்தங்கிய மும்பை அணி பல முறை பிளே ஆப் வந்தாலும் தொடர் தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு பின்னரே கோப்பையை வென்றது. இருப்பினும், அதன் பின் 2013ஆம் ஆண்டு முதல் முறையாக வென்ற பின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோப்பையை வென்றது.
ஆனால், கடந்த நான்கு சீசன்களாக மும்பை அணி மிகவும் சொதப்பியிருக்கிறது. 2021ஆம் ஆண்டில் 5ஆம் இடமும், 2023ஆம் ஆண்டில் பிளே ஆப் சுற்று வரையிலும் வந்த மும்பை அணிக்கு 2022 மற்றும் 2024 சீசன்களில் 10வது இடம்தான் கிடைத்தது. கடந்த மெகா ஏலத்தில் இருந்து அந்த அணி தடுமாறி வருகிறது எனலாம்.
எனவே, தனது அடுத்த மூன்றாண்டு அல்லது ஐந்தாண்டு காலகட்டத்தை திட்டமிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி இந்த மெகா ஏலத்தை எதிர்கொள்ளும் எனலாம். அந்த வகையில், 2025 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விடுவிக்க வாய்ப்புள்ள 5 ஸ்டார் வீரர்களை இங்கு காணலாம்.
ரோஹித் சர்மா: 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்றும் பாராமல் இந்த சீசனிலேயே அந்த அணி ரோஹித் சர்மாவை பொறுப்பில் இருந்து நீக்கியது. அவரின் பேட்டிங் பார்மும் கேள்விக்குள்ளாகியதால் அவரை நிச்சயம் எம்ஐ அடுத்தாண்டு விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம் அல்லது ஐபிஎல் தொடரில் இருந்து அவர் தனது ஓய்வை கூட அறிவிக்கலாம்.
டிம் டேவிட்: மும்பை இந்தியன்ஸ் அணி போலார்டிற்கு பின் டிம் டேவிட்டை மிகவும் நம்பிக்கையுடன் எடுத்தாலும் பெரிதாக அவர் கைக்கொடுக்கவில்லை. எனவே, இவரை வரும் ஏலத்தில் மும்பை அணி விடுவிக்கலாம்.
டிவால்ட் பிரேவிஸ்: இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக உலகம் முழுவதும் பல டி20 தொடர்களில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அவர் பேட்டிங்கில் பெரிதாக உதவவில்லை. எனவே இவரை அந்த அணி விடுவிக்கலாம்.
பியூஷ் சாவ்லா: அனுபவ வீரர் என்றாலும் சுழலில் இவரை மட்டும் நம்பி மும்பை அணி தவறு செய்தது. எனவே இவரை விடுவித்த பின்னர் ஏலத்தில் கூட மீண்டும் அவரை குறைந்த தொகைக்கு எடுக்கலாம்.
ஜெரால்ட் கோட்ஸி: இவரை கடந்த மெகா ஏலத்தில் 5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இருப்பினும் இவர் பெரிதாக கைக்கொடுக்காததால் இவரை மும்பை அணி நிச்சயம் விடுவிக்கும் எனலாம்.