கண்டிப்பாக படிக்க வேண்டிய கருணாநிதியின் சிறந்த 8 புத்தகங்கள்... காலத்தால் அழிக்க முடியாதவை!
நெஞ்சுக்கு நீதி (6 தொகுப்பு): இது முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் சுயவரலாற்று நூல்களாகும். இதனை அவர் 6 தொகுப்புகளாக எழுதினார். கடைசி தொகுப்பு 2013ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 6 தொகுப்பிலும் 1924ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான சுமார் 80 ஆண்டுகால வாழ்க்கையை அவர் இதில் பதிவு செய்துள்ளார். மொத்தமாக 6 தொகுப்புகளையும் 4,115 ரூபாயில் வாங்கலாம். தமிழக மற்றும் தேசிய அரசியல் குறித்து ஆர்வமுடையோர் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூலாகும்.
தென்பாண்டிச் சிங்கம்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் எழுதப்பட்ட வரலாற்று நாவலாகும். 18ஆம் நூற்றாண்டில் கள்ளர்நாடுகளில் ஒன்றாக கூறப்படும் பாகனேரி நாட்டை ஆண்ட வழுக்கு வேலி அம்பலம் குறித்த புராணக் கதையை அடிப்படையாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டது. 1983ஆம் ஆண்டு இது முதற் பதிப்பை கண்டது. தற்போது திருமகள் நிலையம், விசா பப்ளிகேஷன்ஸ் ஆகிய பதிப்பகங்களில் கிடைக்கிறது. தள்ளுபடி விலையாக 266 ரூபாய்க்கு நீங்கள் ஆன்லைனிலும் வாங்கலாம்.
நெருக்கடி நிலையை ரத்து செய்...!: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். திமுகவினர் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. அப்போது, அவசரநிலை காலகட்டத்தில் மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் கருணாநிதி ஆற்றிய உரையின் ஆவணமே இந்த புத்தகம். இது அவசரநிலை காலகட்டம் குறித்து தெரிந்துகொள்வதற்கும், கலைஞரின் பேச்சுதிறனை புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கும் இந்த புத்தகம் கண்டிப்பாக உதவும். அரசியல் ஆர்வம் உடையோர் நிச்சயம் வாசிக்க வேண்டியதாகும். இதனை வ.உ.சி நூலகம் என்ற பதிப்பக்ம வெளியிட்டுள்ளது. தள்ளுபடி விலையில் 190 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம்.
பராசக்தி: திரைக்கதை, வசனம்: 1952ஆம் ஆண்டு கருணாநிதியின் எழுத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய திரைப்படமே 'பராசக்தி'. இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காலத்தால் அழிக்க முடியாத காவியமாக இந்த திரைப்படம் விளங்குகிறது. இந்த திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் சென்றடைய முக்கிய காரணமே கருணாநிதியின் எழுத்துதான். அந்த வகையில், திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை இந்த புத்தகத்தில் படிக்கலாம். இதன் விலை 100 ரூபாய்.
பொன்னர் சங்கர்: இந்த நாவல், தமிழ்நாட்டின் சங்க காலத்திற்கு பிறகான வரலாற்றை பின்னணியாக வைத்து கருணாநிதியால் எழுதப்பட்டது. கொங்கு மண்டலத்தில் நாட்டுப்புற கதைகளில் மக்களிடம் அதிகம் பேசப்பட்ட கதையாகும். இது வரலாற்று நாவலாக எழுதப்பட்டது. இதனை பின்னர் கருணாநிதியின் வசனத்தில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் திரைப்படமாகவும் உருவானது. இந்த புத்தகம் 570 ரூபாய்க்கு தள்ளுபடியில் கிடைக்கிறது.
ரோமாபுரிப் பாண்டியன்: இதுவும் ஒரு கருணாநிதியால் எழுதப்பட்ட வரலாற்று நாவலாகும். இந்த புத்தகத்தை தள்ளுபடி விலையல் 475 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த கதை கருணாநிதியின் எழுத்தில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு தொடராகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
சக்கரவர்த்தி திருமகன்: கருணாநிதியால் எழுதப்பட்ட வரலாற்று நாடகமாகும். அவர் எழுதிய நாடகத்தை புத்தகமாக திராவிடர் கழக இயக்கம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் விலை 70 ரூபாய் ஆகும்.
16 கதையினிலே: கருணாநிதியால் எழுதப்பட்ட சிறுகதை தொகுப்பாகும். இதனை விசா பப்ளிகேஷன் மற்றும் திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது. விலை 110 ரூபாயாகும்.