தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் `இந்த` இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!
ஐபிஎல் என்றாலே அது இரண்டு அணிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கும். ஒன்று சிஎஸ்கே மற்றொரு மும்பை இந்தியன்ஸ்.
அதிலும் சிஎஸ்கேவுக்கு (CSK) தோனியும், மும்பைக்கு ரோஹித்தும்தான் தலா 5 கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். இதில் தோனி 2008ஆம் ஆண்டு முதல் சீசனில் இருந்தே சிஎஸ்கேவின் கேப்டனாக உள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்எஸ் தோனியை (MS Dhoni) 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (அப்போது ரூ.9.5 கோடி) எடுத்தது. தோனிதான் அதிக தொகைக்கு அப்போது எடுக்கப்பட்ட வீரர் ஆவார்.
அதன்பின் 2016, 2017 தடை காலத்திற்கு பின்னரும் 2022 சீசனில் சில போட்டிகள் மற்றும் 2024 ஒட்டுமொத்த சீசன் ஆகியவற்றை தவிர்த்து 2008இல் இருந்து 2023ஆம் ஆண்டுவரை சிஎஸ்கே கேப்டனாக செயல்பட்டார். 2016இல் ரைஸ்ஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.
தோனி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டனாக மட்டுமின்றி யாருக்குமே கிடைக்காத உச்சபட்ச அந்தஸ்துடன் சிஎஸ்கேவின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டார். அப்படியிருக்க, முதல் சீசனில் தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி வேறொரு நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்ததாக சிஎஸ்கேவின் முன்னாள் பேட்டர் சுப்ரமணியம் பத்ரிநாத் (Subramaniam Badrinath) சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றில் பேசிய பத்ரிநாத் கூறியதாவது,"மறைந்த வி.பி. சந்திரசேகர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (Chennai Super Kings) தொடக்க காலத்தில் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர். நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர்தான் என்னை அணிக்காக ஒப்பந்தம் தெய்தார். கையெழுத்திட்டார். அவர்தான் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்தார்" என்றார்.
மேலும் கூறிய பத்ரிநாத்,"ஆனால், அதற்கு முன் வீரேந்திர சேவாக்கை (Virender Sehwag) சிஎஸ்கே நிர்வாகம் பரிசீலித்து வந்தது. அதை சேவாக் என்னிடம் ஒருமுறை சொன்னார். தான் சென்னை வந்து சீனிவாசனை (சிஎஸ்கே உரிமையாளர்) சந்தித்தாக என்னிடம் கூறினார். ஆனால் டெல்லி அணிக்காக விளையாட சேவாக் விரும்பினார். ஏனென்றால் அவர் டெல்லியைச் சேர்ந்தவர். அதன்பின்னரே ஏலத்தில் சிஎஸ்கே தோனியை எடுத்தது" என்றார்.
வீரேந்திர சேவாக் முதல் சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தார். இவர் 2008 முதல் 2015 வரை 104 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 728 ரன்களை குவித்தார். அதில் 2 சதங்கள், 18 அரைசதங்கள் அடக்கம். மேலும், சேவாக் டெல்லி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக மொத்தம் 53 போட்டிகளில் கேப்டனாகவும் விளையாடி உள்ளார்.