மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஊழியர்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இது சாத்தியம் அல்ல என அரசாங்கம் தெரிவித்துவிட்டாலும், இதில் ஊழியர்களுக்கு சாதமான ஒரு அப்டேட்டும் உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களினால் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த பலன்களுக்கு சமமான நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
தற்போது என்பிஎஸ் -இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் ஆகிய இரு ஓய்வூதிய முறைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை அகற்றவும், ஊழியர்களின் அதிருப்தியை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய விவகாரம் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்குமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு NPS இன் கீழ் ஓய்வூதிய உத்தரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி தாக்கங்களை மதிப்பிட்டு வருகிறது. சர்வதேச ஓய்வூதிய முறைகள் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் ஓய்வூதியக் கொள்கையையும் இந்த குழு ஆய்வு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவ்க்கின்றன.
ஆந்திரப் பிரதேச உத்தரவாத ஓய்வூதிய அமைப்பு (APGPS) சட்டம், 2023 இன் கீழ், வருடாந்திரத் தொகை குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில், ஒரு டாப்-அப் மூலம் கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாக பெறுவது உறுதி செய்யப்படுகின்றது. மேலும், ஊழியர் இறந்தால், அவரது வாழ்க்கைத் துணைக்கு உத்தரவாதத் தொகையில் 60 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ், ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாகப் பெறுவார்கள். ஆனால், தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் -இல், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிக்கிறார்கள். இதில் அரசாங்கம் 14% சேர்க்கிறது. NPS என்பது பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension System) NPS பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாக இருப்பதால், இதில் ஓய்வூதியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். 25-30 ஆண்டுகள் சேவையில் உள்ள ஊழியர்கள் NPS இன் கீழ் நல்ல வருமானம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியர்களுக்கு நிலைமை மாறுபடலாம்.
நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு பிரத்யேக நிதியை உருவாக்கும் திட்டத்தையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது கார்ப்பரேட் ஓய்வூதிய பலன்களைப் போலவே இருக்கும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் நிதிப் பொறுப்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. எனினும், NPS -இல் செய்யப்படவுள்ள இந்த மாற்றங்கள் ஊழியர்களுக்கு நிச்சயம் நிவார்னம் அளிக்கும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறந்த ஓய்வூதிய பலன்கள் மற்றும் எதிர்கால நிதி பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆகியவை கிடைக்கும். இந்த மாற்றங்களை அரசாங்கம் எப்போது, எப்படிச் செயல்படுத்துகிறது என்பதை மத்திய அரசு ஊழியர்களும் ஊழியர் சங்கங்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. NPS -இல் முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. NPS குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.