எச்சரிக்கை! போலி நிறுவனங்களின் கடன் உதவிகளை ஏற்க வேண்டாம்: அறிவுறுத்தும் SBI

Fri, 23 Apr 2021-7:35 pm,

நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. SBI ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களின் பெயர்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து SBI வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்களை ஏமாற்ற இந்த நிறுவனங்கள் போலியான கடன்களை வழங்குவதாக SBI தெரிவித்துள்ளது.

"SBI வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதை! SBI லோன் ஃபைனான்ஸ் லிமிடெட் அல்லது இதுபோன்ற ஏதேனும் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொண்டால், ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள். இவை SBI உடன் தொடர்புடையவை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களது பணத்தை மோசடி செய்ய அவர்கள் போலி கடன் சலுகைகளை வழங்குகிறார்கள்" என்று SBI ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், முக்கிய செய்தியை வெளியிட்ட SBI, "எஸ்பிஐ லோன் ஃபைனான்ஸ் லிமிடெட் பெயரிலும் அதுபோன்ற மற்ற நிறுவனங்களின் பெயர்களிலும் கடன் வழங்குவதாகக் கூறி சில நபர்களும் நிறுவனங்களும் பொது மக்களை ஏமாற்ற முயற்சிப்பது தெரிய வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

SBI ஃபைனான்ஸ் லிமிடெட் போன்ற எந்தவொரு நிறுவனங்களுடனும் SBI-க்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், கடன்களை வழங்குவதாகக் கோரும் நபர்கள் தங்கள் பெயரை பயன்படுத்த அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் SBI கூறியுள்ளது.

கடன் தேவைப்படும் அனைத்து நபர்களுக்கும் அருகிலுள்ள வங்கி கிளைகளை அணுக வேண்டும் என்றும், இடைத்தரகர்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. 

இந்த ஆண்டு ஜனவரியில், நாட்டின் உயர்மட்ட கடன் வழங்குனரான SBI, டிஜிட்டல் தளங்கள் மற்றும் மொபைல் ஃபோன்கள் மூலம் நடக்கும் மோசடிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தது.  " மோசடி செய்யும் உடனடி கடன் செயலிகளிடம் ஜாக்கிரதை! தயவுசெய்து அங்கீகரிக்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள். SBI என்றோ அல்லது வேறு வங்கியாகவோ தன்னைக் காட்டிக்கொள்ளும் எந்த நபருக்கும் உங்கள் சொந்த விவரங்களை அளிக்காதீர்கள்" என வங்கி ட்வீட் செய்திருந்தது. சொத்துக்கள், வைப்புத்தொகை, கிளைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பொறுத்தவரை எஸ்பிஐ மிகப்பெரிய வணிக வங்கியாகும். SBI நாட்டின் மிகப்பெரிய அடமானக் கடன் வழங்குநராகவும் உள்ளது. வங்கியின் வீட்டுக் கடன் போர்ட்ஃபோலியோ 5 லட்சம் கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. வீட்டுக் கடன்களில் 34% சந்தைப் பங்கை SBI கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link