தாய்நாடான தாய்லாந்தில் போராட்டம், அயல்நாடான ஜெர்மனியில் கேளிக்கை!! மன்னவா இது தகுமா!!
தாய்லாந்தின் மன்னர் மகா வாசிராலோங்கோன் மற்றும் அவரது கொள்கைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலகி அவசரகால நிலையை அறிவித்ததில் இருந்து நான்கு பேருக்கு மேல் மக்கள் ஒன்றாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட நிலையிலும், எதிர்ப்பாளர்கள் கடந்த ஒரு வாரமாக கூடி, முடியாட்சிக்கு எதிராக போராடி ஜனநாயகத்தை கோரி வருகின்றனர்.
இருப்பினும், மன்னர் மஹா வாசிராலோங்கோன் மீது மக்கள் காட்டும் கோவம் தேவையற்றதோ சட்டவிரோதமானதோ அல்ல. ஒரு புறம் தாய்லாந்து முழுவதும் கொரோனா தொற்று மற்றும் லாக்டௌனால் ஏற்பட்ட பொருளாதாரக் கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ளது. மறுபுறம், மன்னர் மஹா வாசிராலோங்கோன், தனது 20 அரச உதவியாளர்கள், 4 மனைவிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுடனும் ஜெர்மனியில் ஒரு ஹோட்டலுக்கு அவ்வப்போது சென்று விடுகிறார். ஜெர்மனியில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் முழு தளமும் மன்னர் மற்றும் அவரது அரச கூட்டாளிகளுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தில், மன்னரின் மனைவி அல்லாத கூட்டாளிகளை மன்னரின் அரச கூட்டாளிகள் என்று கூறுவது வழக்கம். இந்த பதவி 1932 இல் முடியாட்சியுடன் சேர்த்து ஒழிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் தற்போதைய மன்னர் அதை மீண்டும் புதுப்பித்துள்ளார். மன்னர் இந்த அரசு கூட்டளிகளுடன் கேளிக்கைகளில் ஈடுபடுகிறார். தாய்லாந்து மன்னர் தங்கியிருப்பதால், அந்த ஹோட்டல் வேலைகளை தொடர்ந்து செய்ய ஜெர்மன் அரசாங்கம் ஹோட்டல் ஊழியர்களுக்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
மன்னர் மஹா வாசிராலோங்கோன் 35 வயதான சினனெத் வோங்வாஜிராபாகடியை மணந்தார். சினனெத் முதலில் செவிலியராக இருந்தார். பின்னர் அவர் தாய் இராணுவத்தில் ஹெலிகாப்டர் பைலட்டானார். பைலட் பணியில் அவர் சேர்ந்து மூன்று மாதங்களுக்குள், மன்னர் அவருடன் திருமணம் புரிய ஆசைப்பட்டு அவரிடம் கேட்டார். ஆனால் அவரது திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அவரை அவநம்பிக்கை குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்பினார்.
இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு, சினனெத் வோங்வாஜிராபாகடிக்கு, ஒரு ஆண்டு சிறையில் இருந்த பிறகு தண்டனை மன்னிக்கப்பட்டது. விடுதலையான உடனேயே, சினனெத் ஜெர்மனியில் உள்ள மன்னரிடம் அனுப்பப்பட்டார். ராஜா மஹா தனது வினோதமான நடவடிக்கைகளுக்காக எப்போதும் சர்ச்சையில் இருப்பவர். அவருக்கு அவருடைய நாய் ஃபூ-ஃபூ மீது அபரிமிதமான பாசம் இருந்தது. அதை அவர் ‘ராயல் தாய் விமானப்படையின்’ ஏர் சீஃப் மார்ஷல் ஆக்கினார்.
மன்னர் மஹா வாசிராலோங்கோன் கொரோனா காலத்தில், தன் பொறுப்பை மறந்து, தாய்லாந்திலிருந்து அவ்வப்போது ஜெர்மனிக்கு சென்று, அங்கு ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தாய்லாந்தில் மன்னரை விமர்சித்தால் 15 ஆண்டுகளுக்கான சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இருப்பினும், இவற்றையெல்லாம் மீறி, பொது மக்களில் சிலர் மன்னருக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.
All Photos: Social Media