பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்கள்! எந்தெந்த மாவட்டங்களுக்கு?
வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட இருக்கிறோம். இதை முன்னிட்டு, தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைகளில், பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப நினைப்பர். தென் மாவட்டங்களை சொந்த ஊர்களாக கொண்ட பலர், சென்னையில் இருக்கின்றனர். இவர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப தெற்கு ரயில்வே சிறப்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
வண்டி எண்: 06093 ரயிலானது, வரும் ஜனவரி 13ஆம் தேதியன்று தாம்பரத்தில் இருந்து 10.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், தஞ்சை, அருப்புக்கோட்டை, நெல்லை வழியாக மறுநாள் மதியம் 12.30 மணியளவில் கன்னியாகுமரிக்கு சென்றுவிடும்.
வரும் 10, 12 ,17 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு கிளம்பும் ரயில் (வண்டி எண் 06104) அதிகாலை 3.30 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும்.
அதே போல மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில், காலை 5.20க்கு ராமநாதபுரத்தை சென்றடையும். இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, மயிலாடுதுரை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியே இயக்கப்படுகிறது.
வரும் 12, 19 ஆகிய தேதிகளில் 22 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் (06089) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு கிளம்பி, அரக்கோணம், காட்பாடி, கரூர், மதுரை, நெல்லை வழியே மறுநாள் மதியம் 1 மணியளவில் நாகர்கோவிலை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வரும் 13,20 தேதிகளில் நாகர்கோவில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06090) மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
ஜனவரி 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து பிற்பகல் 3.30 மணியளவில் புறப்படும் ரயில் (06092), மறுநால் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
அதே போல ஜனவரி 13,20,27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், (06091) அதிகாலை 4.55க்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில்கள் அம்பை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விழுப்புரம், திருச்சி, சேரன்மாதேவி வழியாக இயக்கப்படும்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகர்கோவில் ஆகிய 4 மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அவை எங்கிருந்து, எப்போது புறப்படுகின்றன என்பதை இங்கு பார்த்தோம். இதற்கான முன்பதிவு நாளை (ஜனவரி 5) தொடங்க இருக்கிறது.