பொங்கல் சிறப்பு தொகுப்பில்... வருகிறது புதிய பரிசு... அரசு அறிவிப்பு விரைவில்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வருடம் தோறும் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்குவது வழக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பொருள்கள் வழங்கப்படும்.
ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் இந்த சிறப்பு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போதும் டிசம்பர் மாதத்தில்தான் வெளியாகும்.
டிசம்பர் மாத கடைசி அல்லது ஜனவரி தொடக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி, ரேஷன் கடைகளில் பயனாளர்களுக்கு டோக்கனும் வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் என்னென்ன தொகுப்புகள் இடம்பெறும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, கடந்தாண்டை போல் ரூ.1000 ரொக்கமாக கிடைக்குமா என்ற அறிவிப்பையும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் 21 பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது அதில் இருந்து வெல்லம் உருகிவிடுகிறது என கூறப்பட்டு, பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, அதற்கேற்ப பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தாண்டு இந்த சிறப்பு தொகுப்பில் வெல்லமும் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, சென்னைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சர்க்கரைக்கு பதிலாக அரசு மக்களுக்கு வெல்லத்தை வழங்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை எஸ் விமலநாதன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் காரணமாகவும் கூட இந்தாண்டு வெல்லம் வழங்கப்படலாம். இல்லையெனில் இந்தாண்டு நாட்டுச் சர்க்கரை தமிழ்நாடு அரசால் வழங்கப்படலாம் கூறப்படுகிறது.
ஏனெனில், இந்தாண்டு கூட்டுறவுத்துறை சார்பாக விற்பனை செய்யப்படும் பொங்கல் தொகுப்பு மூன்று வகைகளாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. இவற்றுடன் அரை கிலோ நாட்டுச்சர்க்கரை இலவசமாகவும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், பொங்கல் சிறப்பு தொகுப்புடனும் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.