நரம்பு தளர்ச்சி முதல் இதய நோய் வரை... அற்புதங்கள் செய்யும் சின்னஞ்சிறு கசகசா..
கசகசா: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் கசகசா பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதன் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் காரணமாக, ஆயுர்வேதத்தில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியம்: கசகசாவில் நிறைவுறா கொழுப்புகள் உள்ளதால், கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
நரம்பு தளர்ச்சி: நரம்பு சுவர்களை வலுப்படுத்தும் ஆற்றல் கசகசாவிற்கு உண்டு. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கசகசாவை ஊறவைத்து அரைத்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்துவதால், முழுமையான ஊட்டச்சத்தை பெறலாம்.
செரிமான ஆரோக்கியம்: கசகசாவில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலத்திற்கு தேவையான, பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தூக்கமின்மை: உடல் ஆரோக்கியத்திற்கு ஆறு முதல் ஏழு மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம். இந்நிலையில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கசகசா பால் அருந்தி வருவது நன்மை பயக்கும். மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கசகசாவிற்கு உண்டு.
எலும்பு ஆரோக்கியம்: கசகசாவில் கால்சியம் மற்றும் புரதம் அதிக அளவில் உள்ளதால், எலும்பு அடர்த்தியை அதிகரித்து, தசையை வலுவாக்கி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
தைராய்டு பிரச்சனை: கசகசா விதைகளில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய, துத்தநாகச் சத்து அவசியம் என்பதால், கசகசாவை தொடர்ந்து உட்கொள்வது, தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்ய உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.