தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சருமம் அழகு மேம்படும், உடல் இளைக்கும்
குளிர்காலத்தில், வறுத்த அல்லது வேகவைத்த வேர்க்கடலையை உப்பு, மிளகு அல்லது வெல்லத்துடன் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் மிக குறைந்த விலையிலேயே வேர்க்கடலையில் பொதிந்திருக்கிறது
நார்ச்சத்து அதிகமாக உள்ள வேர்க்கடலையில் 13 வைட்டமின்களும் 26 தாதுப் பொருட்களும் நிறைந்துள்ளது. வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. அதோடு, வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று சொல்லும் அளவுக்குபுரதச் சத்து அதிகமாக உள்ளது. 30 விதமான ஊட்டச் சத்துகள் கொண்ட வேர்க்கடலை, நீரிழிவு நோயாளிக்கு நல்ல திண்பண்டம் ஆகும்
குளிர்ந்த காலநிலையில் ஆரோக்கியமாக இருக்க உதவும் வேர்க்கடலை உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. வேர்க்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களின் நல்ல மூலமாகும், மேலும் அவை உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். தவிர, வேர்க்கடலை சாப்பிடுவது கண்பார்வை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது
வேர்க்கடலையில் நியாசின், வைட்டமின் பி3 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த கூறுகள் அனைத்தும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் மங்கு போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்கின்றன. இதனால் முகத்தில் பொலிவு ஏற்படுவதுடன், சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்
வேர்க்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இவை இரண்டுமே எடை குறைப்புக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டவை. நார்ச்சத்து நிறைவான உணர்வை அளிக்கின்றது, செரிமானத்தை எளிதாக்குகிறது. இதன் மூலம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது தவிர்க்கப்பட்டு, உடல் எடை சட்டென்று குறையும்
வேர்க்கடலையில் புரதம் நிறைந்துள்ளதால் இது சக்தி நிரம்பிய காலை உணவு என்று சொல்லலாம். வேர்க்கடலை சாப்பிட்டால் வயிறு நிரம்புவதுடன் சக்தியும் கிடைக்கும். அடிக்கடி பசி எடுக்காது
உயர்தர புரதத்தின் ஆதாரமாக இருப்பதால், வேர்க்கடலை சாப்பிடுவது தசைகளின் வலிமையையும் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு வேர்க்கடலையை கொடுத்து பழக்க வேண்டும்