இந்திய அணிக்கு தேர்வான ராகுல் டிராவிட் மகன் - புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட இருக்கிறது. இதற்கான அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் பிளேயரான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளுக்கான இரண்டு அணிகளிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
18 வயதான சமித் சமீபத்தில் மைசூரு வாரியர்ஸ் அணிக்காக மஹாராஜா டி20 டிராபியில் விளையாடினார். வலது கை பேட்ஸ்மேனான அவர், இந்த லீக்கில் 7 இன்னிங்ஸ்களில் 113.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 82 ரன்கள் எடுத்தார்.
ஒரு போட்டியில் மட்டும் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 33 (24) ரன்கள் எடுத்தார் சமித் டிராவிட். இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது அமான் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். சோஹம் பட்வர்தன் நான்கு நாள் போட்டிகளில் அணியை வழிநடத்துவார்.
இந்தியா U-19, ஆஸ்திரேலியா U-19 தொடர் செப்டம்பர் 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இரு அணிகளும் மூன்று 50 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளன.
அதைத் தொடர்ந்து சென்னையில் இரண்டு நான்கு நாள் ஆட்டங்கள் நடக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.