UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஜூன் 7, 2024, அதாவது இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
இந்த அறிவிப்பை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das) வெளியிட்டார். டிஜிட்டல் பணம் செலுத்தும் செயல்முறையை சீராக்குவதில் இந்த ஒருங்கிணைப்புக்கு இருக்கும் ஆற்றலை பற்றி அவர் வலியுறுத்தினார்.
சாமானியர்கள் இனி தங்கள் UPI Lite -இல் இருப்பைத் தானாக நிரப்ப முடியும். இதுவரை மக்கள் ஒவ்வொரு முறையும் பணத்தை மாற்ற வேண்டிய நிலை, அதாவது டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டிய நிலை இருந்தது. புதிய மாற்றத்திற்குப் பிறகு, UPI Lite இல் உள்ள பணம் வரம்புக்குக் கீழே சென்ற பிறகு, வங்கிக் கணக்கிலிருந்து UPI Lite-க்கு தானாகவே மாற்றப்படும்.
UPI லைட் சேவை தற்போது பயனர்கள் தங்கள் வாலட்டில் ரூ. 2,000 வரை ஏற்றவும், அதாவது லோட் செய்யவும், ரூ. 500 வரை பணம் செலுத்தவும் உதவுகிறது. ஆனால் இப்போது இது மாறவுள்ளது. முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பின் கீழ், பயனர்கள் தங்கள் UPI லைட் வாலட்டில் தானாக நிரப்பும் (auto-replenishment) அம்சத்தின் மூலம் பயனடைவார்கள்.
அதாவது, வாலட் இருப்பு, பயனரின் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் கீழே சென்றால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் தானாகவே மாற்றப்படும். இது கூடுதல் சரிபார்ப்பு அல்லது ப்ரீ-டெபிட் அறிவிப்பின் தேவையை நீக்கும்.
இந்த நடவடிக்கையின் காரணத்தை விளக்கிய ஆர்பிஐ (RBI), யுபிஐ லைட் (UPI Lite) பரிவர்த்தனைகளை முன்பை விட சிறப்பாக செய்ய வேண்டியதன் அவசியத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
யுபிஐ லைட்டை இ-மேண்டேட் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான வசதியுடன், சிறிய மதிப்பு பரிவர்த்தனை சேவைகளை மேம்படுத்துவதே ஆர்பிஐயின் இலக்கு என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் MPC கூட்டத்தின் போது பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், UPI Lite, சாதனத்தில் உள்ள வாலட் மூலம் விரைவாகவும் தடையின்றியும் சிறிய மதிப்புக் கட்டணங்களைச் செலுத்த செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டதையும் அதன் பிறகு அதில் செய்யப்பட்டுள்ள மேம்படுத்தல்களையும் விளக்கினார்.