RBI Repo Rate: வட்டி விகிதங்கள் மாறுமா? நல்ல செய்தி கொடுக்குமா ரிசர்வ் வங்கி?
இந்த வாரம் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) மூன்று நாள் கூட்டம் நடக்கவுள்ளது.
நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் ரெப்போ விகிதம் குறித்த முடிவில் இருக்கலாம்.
ரஷ்யா-உக்ரைன் போரைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி (Reserve Bank) மே 2022 இல் கொள்கை விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் அது 6.5 சதவீதத்தை எட்டியது. அதன் பின்னர், கடந்த மூன்று தொடர்ச்சியான இருமாத நாணயக் கொள்கை மறுஆய்வுக் கூட்டங்களில் கொள்கை விகிதம் மாற்றப்படாமல் நிலையானதாக வைக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) மூன்று நாள் கூட்டம் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) வெளியிடப்படும்.
இம்முறை பணவியல் கொள்கை தற்போதுள்ள விகிதக் கட்டமைப்பு மற்றும் கொள்கை நிலைப்பாட்டில் தொடர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை அதிகரிக்கவில்லை என்றால், வங்கிகளில் கடன் பெற்றவர்களின் வட்டி விகிதங்களும் அதிகரிக்காது. இதனால் கடன் வாங்கியவர்கள் மீது கூடுதல் இஎம்ஐ சுமை ஏற்படாது.
"ரிசர்வ் வங்கியின் இணக்கமான நிலைப்பாடு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி (RBI) நீண்ட காலமாக முக்கிய வட்டி விகிதங்களை நிலையானதாக வைத்துள்ளது, இது அனைத்து துறைகளுக்கும் பலனளித்துள்ளது." என நரெட்கோ தேசிய தலைவர் ராஜன் பந்தேல்கர் கூறியுள்ளார்.