வீட்டு கடன் வாங்குவோருக்கு சூப்பர் சலுகை.. SBI வழங்கும் பம்பர் ஆஃபர்..!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.80 சதவீதம் என்ற மிகவும் குறைவாகத் துவக்க வட்டி விகிதத்தில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் இது மிகவும் குறைவான வட்டி விகிதம் என்பதால் 6.80 சதவீத வட்டியில் EMI தொகை மற்ற வங்கிகளில் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கும்.
மேலும் SBI ஒப்புதல் பெற்ற கட்டுமான திட்டங்களில் வீடு வாங்குவோருக்கு வீட்டுக் கடனுக்கான செயலாக்கக் கட்டணம் அதாவது processing fee முழுமையாக ரத்துச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்தச் சிறப்புச் சலுகை வருகிற மார்ச் 2021 வரையில் மட்டுமே அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய வீட்டுக் கடன் சேவை பிரிவில் நாட்டின் முன்னணி வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சுமார் 34 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஒரு நாளுக்குச் சாரசரியாக SBI வங்கி சுமார் 1000 பேருக்கு வீட்டு கடன் திட்டத்தில் கடன் அளிக்கும் வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 10 வருடத்தில் SBI வங்கி வீட்டுக்கடன் பிரிவில் 5 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய வங்கித்துறையில் மிகவும் பாதுகாப்பான வர்த்தகப் பிரிவாகக் கருதப்படும் வீட்டுக் கடன் சேவை பிரிவில் SBI வங்கி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையிலும், புதிய வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்று பல புதிய வழிகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சென்று அடையத் திட்டமிட்டு வருகிறது.
மத்திய அரசு முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு அளிக்கப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் எஸ்பிஐ வங்கி சுமார் 194,582 வீட்டுக் கடன்களை அளித்துள்ளது. இதன் மூலம் 194,582 பேருக்கு அரசின் சலுகையை எஸ்பிஐ வங்கி நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளது.