கண்களால் கிறங்கடித்த சில்க் ஸ்மிதாவின் அழகிய புகைப்பட தொகுப்புகள்

Wed, 02 Dec 2020-5:14 pm,

ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி ஆக பிறந்த சில்க் ஸ்மிதா நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவர். சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில்க் ஸ்மிதா நடிகையாக வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். 

நடிகை சில்க் ஸ்மிதாவை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்த இயக்குனர் வினுசக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார்.

 

முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார். முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதா விற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. 

தமிழில் உருவான எல்லா திரைப்படங்களிலும் சில்க் ஸ்மிதா கட்டாயம் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினர். இதன்காரணமாக குறுகிய காலகட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா.

மிகக் குறுகிய வாய்ப்புகளே நடிக்க கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் அசாத்திய நடிப்பால் சக கலைஞர்களை துவம்சம் செய்தார் சில்க் ஸ்மிதா. பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம் பிறை என சில்க் ஸ்மிதா கவர்ச்சி கடந்து நடிப்பிலும் முத்திரை பதித்தார்.

கவர்ச்சி நடிகையாக இருந்ததால் பலரின் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளான சில்க் ஸ்மிதா ஆண்களால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார்.

மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியே இருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்வில் பல மர்மங்களும் சர்ச்சைகளும் ஒளிந்து உள்ளன. 

மர்மங்களால் நிறைந்த சில்க்ஸ்மிதாவின் இறுதி வாழ்க்கையில் தாடிக்கார டாக்டர் என்ற பெயர் இன்றளவும் யாரென கண்டுபிடிக்கப்படாமல் மர்மமாகவே இருந்து வருகிறது. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா மரணமடைந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாரும் பெற்றுக்கொள்ள ஆள் இல்லாத அனாதை பிணமாக வைக்கப்பட்டிருந்தார். தகவல் கிடைத்த பின்னரே அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் ஸ்மிதாவின் உடலை பெற்றுக்கொண்டனர். 

அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் பங்கேற்ற விழாவில் பங்கேற்க மறுத்தது, நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போது எழுந்து நிற்க மறுத்தது உள்ளிட்ட ஏராளமான குறைகள் சில்க் ஸ்மிதாவை திமிர் பிடித்த பெண்ணாக இன்றும் வரலாற்றில் சித்தரித்துக் கொண்டிருக்க, தான் சம்பாதித்த பணத்தை பண்ணையார்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மக்களுக்கு நிதியாக வாரி வழங்கிய சில்க்ஸ்மிதாவின் மற்றொரு முகம் பலரும் அறியாத ஒன்று.

மறைந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் பல திரை ரசிகர்களுக்கு நினைவில் நீங்காத பெயராக நிலைத்திருக்கிறார்

இந்நிலையில் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் பலராலும் நினைவுகூரப்படும் சில்க் ஸ்மிதாவின் 60வது பிறந்தநாள் இன்று.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link