காதலர்களுக்கு ஜாக்பாட்! டேட்டிங் செய்ய தனி ரூம் - குழந்தை பெற 20 மில்லியன் காசு
இந்தியா, சீனா, அமெரிக்கா, இந்தோனேஷியா போன்ற இந்த உலகில் உள்ள பல நாடுகள், அதிக மக்கள்தொகை பிரச்சனையுடன் போராடி வருகின்றன, கிடைக்கக்கூடிய வளங்களுக்கு ஏற்ப பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த திட்டங்களை உருவாக்குகின்றன. இருப்பினும், குறைந்த மக்கள்தொகை கொண்ட ஒரு சில நாடுகள், குறைவான மக்களை ஒரு தேசியப் பிரச்சனையாகப் பார்க்கின்றன, ஆண்களையும் பெண்களையும் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கின்றன.
அந்தவகையில், தென் கொரியா அரசாங்கம் முதல் முறையாக சந்திக்கும் ஜோடிகளுக்கு டேட்டிங், திருமணம் மற்றும் தங்குவதற்கு நிதியுதவி வழங்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, காதலர்கள் தாங்கள் விரும்பும் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
அவர்கள் திருமணம் செய்து கொண்டால் குறிப்பிட்ட தொகையும், குழந்தை பெற்றுக் கொண்டால் குறிப்பிட்ட தொகையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புசான் நகரத்தில் தங்கி திருமணம் செய்து குழந்தைகளைப் பெற முடிவு செய்யும் தம்பதிகளுக்கு $64,000 பரிசாக வழங்க இப்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர டேட்டிங் உள்ளிட்டவைகளுக்கும் காசு கொடுக்கப்படும்.
2023 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வெளிநாட்டினரைத் தவிர கொரியாவின் மொத்த மக்கள்தொகை 49.84 மில்லியனாக இருந்தது. இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.2% குறைந்துள்ளது. மக்கள் தொகையை பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. தென்கொரியாவில் 2023 ஆம் ஆண்டு மொத்த பிறப்பு விகிதம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.7 விழுக்காடு குறைவாக இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இளைஞர்கள் டேட்டிங் மற்றும் திருமணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. குறிப்பாக குழந்தை பெற்றுக் கொள்வதில் பலரும் நாட்டம் கொள்வதில்லையாம். இது குறித்து கவலையை வெளிப்படுத்தியிருக்கும் தென் கொரியா, குறைந்த பிறப்பு விகிதம் நீண்ட காலமாக ஒரு சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 194,000 திருமணங்கள் மட்டுமே நடந்தன, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இது 40% சரிவு ஆகும்.
இது குறித்து அரசு மற்றும் தனியார் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை திருமணம் செய்து கொள்ளாத ஆண்களும் பெண்களும் சந்தித்துக் கொள்ளும் வகையில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் சந்திக்கும் இருவர் தங்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு கோவிலில் இரண்டு நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள். அதில் இருந்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு அங்கேயே திருமணமும் செய்து வைக்கப்படுகிறது. புத்த சமூகத்தில் இருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் கூட இப்போது டேட்டிங் செய்ய ஆணையும் பெண்ணையும் அனுமதித்துள்ளனர்.
இதுதவிர திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் இலவச திருமண மண்டபங்கள், மானிய வாடகையுடன் கூடிய வீடுகளும் தம்பதிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. குழந்தை பெற்றுக் கொள்ள தம்பதிகளுக்கு மருத்துவமனை செலவுகளும் குறைப்பட்டுள்ளன. ஐவிஎப் சிகிச்சை மேற்கொள்ள அரசே நிதியுதவி அளிக்கிறது.