வீடுகளில் மின்கசிவு? உடனே இந்த கருவியை பொருத்தவும் - தமிழ்நாடு மின்சாரத்துறையின் முக்கிய அறிவிப்பு

Thu, 30 Jan 2025-1:01 pm,

சென்னை வடபழனியில் பக்கெட் வாட்டர் ஹீட்டரை சாக்கெட்டில் பொருத்தும்போது ஆமோஸ் என்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மின் கசிவு இருந்தது தெரியாததால் இந்த மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தடுக்க முடியும் என தமிழ்நாடு மின்சார வாரியம் (Tamil Nadu Electricity Board) தெரிவித்துள்ளது. ஆர்சிடி என்ற கருவியை வீட்டில் பொருத்தினால் சிறிய மின்கசிவு இருந்தால் கூட உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை தடுத்துவிடும் என தெரிவித்துள்ளது.

அதாவது, ஆர்சிடி கருவி வீடு கடைகளில் பொருத்தினால் சிறிய மின்கசிவுகள் இருந்தால் கூட அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்துவிட முடியும். அதனால் ஆர்சிடி கருவி என்றால் என்ன, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? தமிழ்நாடு மின்சார வாரியம் என்ன சொல்கிறது என்பது குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். 

 

தமிழ்நாட்டில், மின் பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளை குறைக்கவும், அத்தகைய மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆர்.சி.டி. (RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த வழிவகை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் பகிர்மான விதித் தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

1. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், தெரு விளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற உபயோகத்திற்கான ஒருமுனை, மும்முனை மின் இணைப்புகளிலும், தற்காலிக மின் இணைப்புகளிலும் ஆர்.சி.டி. (RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை பொருத்த வேண்டும். மின் அதிர்ச்சியை தவிர்த்து மனித உயிர்களை காக்கும் பொருட்டு அதனுடைய மின் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

2. அதே போல 10 கிலோ வாட்டிற்கு மேல் மின் சாதனங்களை பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக் கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்திற்கான மின் இணைப்புகளில் மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் பொருட்டும், உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவிற்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்.சி.டி. (RCD) சாதனத்தை பொருத்த வேண்டும்.

3. தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதை தடுக்கும் வகையில், மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக ஆர்.சி.டி. சாதனத்தை பொருத்த வேண்டும். அத்தகைய அமைப்பினால், அந்தந்த கட்டிடப்பகுதியில் உள்ள மனிதர்கள், அந்தந்தப்பகுதியில் உண்டாகும் மின்பழுதினால் ஏற்படும் மின் அதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவார்கள்.

4. புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், மேற்கண்ட உயிர் காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில் நிறுவி அதை விண்ணப்ப படிவத்தில் உறுதியளிக்க வேண்டும். ஆர்.சி.டி. (RCD) என்கிற சாதனத்தை பொருத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல், மின்னிணைப்பு வழங்கப்படமாட்டாது.

5. மின் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை அறவே தடுக்க வேண்டுமென்பது இவ்வாணையத்தின் நோக்கமாகும். இந்த சட்டப்பூர்வமான வழிமுறையை அனைத்து பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link