பொங்கல் பரிசு 1000 ரூபாய்? ரேஷன் பயனாளர்களுக்கு நல்ல செய்தி... விரைவில் டோக்கன் விநியோகம்
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வேட்டி சட்டை, பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் சிற்சில மாற்றங்கள் ஏற்படும்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 2022ஆம் ஆண்டில் முழு கரும்புடன் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.
2023ஆம் ஆண்டில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை பொங்கல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டும் பொங்கலுக்கு இதை பொருள்களும், ரூ.1000 ரொக்கமும் வழங்கப்பட்டது.
அந்த வகையில், இந்தாண்டுக்கான பொங்கல் சிறப்பு தொகுப்பில் (Pongal 2025) என்னென்ன பொருள்கள் அறிவிக்கப்படும், இந்தாண்டும் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படுமா (1000 Rupees For Pongal) என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் உள்ளது.
இந்நிலையில், பொங்கல் சிறப்பு தொகுப்பு (Pongal Special Gift Packs) குறித்த அறிவிப்பு இந்த வாரமே வரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகமும் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று உயிரிழந்த நிலையில், விரைவில் அங்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம். இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வரும்.
இதனால், பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பதில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக விரைவாகவே அதுசார்ந்த பணிகளை தமிழக அரசு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தேர்தல் அவ்வளவு விரைவாக அறிவிக்கப்படாது என்றாலும் முன்னெச்சரிக்கைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்.
அந்த வகையில், பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்த அரசாணை இந்த வாரத்திற்குள் வரலாம் என்றும் டோக்கன் விநியோகம் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன.