ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசு - யார் யாருக்கு கிடைக்கும்?
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் நலனுக்காக திட்டங்கள் கொண்டுவருவதில் எப்போதும் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கர்ப்பிணிகள் அவர்களின் பேறு காலத்தில் சந்திக்கும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் பொருட்டும், தாய் மற்றும் சேய் இருவரும் ஊட்டச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கவும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம் (Dr Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) 2006ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தில் முக்கிய மாற்றம்: மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படும் இந்த திட்டத்தில் இந்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
3 தவணைகள்: இதற்கு முன் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14 ஆயிரம் நிதி உதவி 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப். 1ஆம் தேதி முதல் இது மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எந்தெந்த காலங்களில் எவ்வளவு கிடைக்கும்?: அதன்கீழ் பெண் கருவுற்ற 4ஆவது மாதத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். அடுத்து, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் 6 ஆயிரம் வழங்கப்படும். குழந்தை பிறந்த பின்னர் 9ஆவது மாதத்தில் ரூ.2 ஆயிரம் என மூன்று தவணைகளாக ரூ.14 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மொத்தம் எவ்வளவு தொகை கிடைக்கும்?: ரொக்கமாக அளிக்கப்படும் நிதி உதவியை தாண்டி பெண் கருவுற்ற 3ஆவது மற்றும் 6ஆவது மாதத்தில் என இரண்டு முறை தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் இதன் மதிப்பு தலா ரூ.2 ஆயிரம் ஆகும். அந்த வகையில், இந்த திட்டத்தின் கீழ் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் மதிப்பில் உதவி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு பதிவு செய்வது எப்படி?: பெண்கள் கருவுற்ற 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார மையத்தின் செவிலியரிடம் ஆதார் கார்டை காட்டி பதிவு செய்து RCH எண்ணை பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், 12 வாரத்திற்குள் முன்பதிவாவது செய்திருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: மேலும் இதற்கு தாய்சேய் நல அட்டையின் நகல், வறுமைக் கோட்டிற்குட்பட்டவராக இருப்பதற்கான சான்றிதழும் அவசியமாகும். ஒருவேளை நீங்கள் இலங்கை தமிழர் எனில் புலம் பெயர்ந்தோர் சான்றிதழ் நகலும், உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினர் என்றால் அதற்கான அட்டையின் நகலும் சமர்பிக்க வேண்டும்.
தகுதிகளும், நிபந்தனைகளும்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள கர்ப்பிணி பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். கருவுற்ற பெண் 19 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் முதலிரண்டு பிரசவங்களுக்கு மட்டுமே நிதி உதவி அளிக்கப்படும். அடுத்தடுத்த பிரசவங்களுக்கு நிபந்தனையில் பெயரில் நிதி உதவிக்கிடைக்கும் எனவும் தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கான அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் மற்றும் செவிலியர்களை தொடர்புகொள்ளவும்.