வயநாட்டின் நிலைமை ஊட்டிக்கும் வரலாம்... எச்சரிக்கும் வல்லுநர்கள் - ஆக்ஷன் எடுக்குமா அரசு?
கேரளாவின் மலைப் பிரதேசமான வயநாடு மாவட்டத்தில் நேற்று (ஜூலை 30) அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும், இன்னும் பலர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 128 பேர் மருத்துவமனையில் இருப்பதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
மீட்புப் பணிகள் இன்றும் தொடரும் நிலையில், இந்த நிலச்சரிவு குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் நீத்துறை உறுப்பினரான நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் மற்றும் நிபுணர் உறுப்பினரான கே. சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை எடுத்துள்ளது.
மேலும் அவர்கள் நிலச்சரிவு ஏற்பட காரணமாக இருந்த பாதிக்கப்பட்ட கிராமங்களை சுற்றியிருக்கும் கட்டடங்கள், சாலைகள், குவாரிகள் ஆகியவை குறித்த தரவுகளை சேமிக்க கேரளா அரசு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பிரதேசங்களான வயநாட்டில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவும், அதுசார்ந்த பாதிப்பும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கும் ஒரு எச்சரிக்கையை எழுப்பியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட அதிகளவில் மழைப்பொழிவுதான் காரணம் என்றாலும், அதன் தொடக்கப்புள்ளி என்பது மலைப் பிரதேசங்களில் முறையற்ற வகையிலும், இயற்கைக்கு எதிரான வகையிலும் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு என்கின்றனர். எனவே, இதனை இயற்கை பேரிடர் என அழைக்க முடியாது எனவும், மனிதால் ஏற்பட்ட பேரிடர் என்றே அழைக்க முடியும் எனவும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
அந்த வகையில், 'பூவுலகின் நண்பர்கள்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல்களில்,"நீலகிரியில் மாவட்டத்தின் ஊட்டி, குன்னூரில் 30 சென்டிமீட்டர் மழை பெய்தால், வயநாட்டில் ஏற்பட்டதை போன்றும் இங்கு பேரழிவு ஏற்படும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இதுகுறித்த அறிவியல் ஆய்வினை மேற்கொண்டு, நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளில் புதிய கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் பசுமைப் படலத்தை அதிகரித்து மண்ணை பலப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
கடந்த 2011ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தலைமையிலான மேற்குதொடர்ச்சி சூழலியல் நிபுணர் குழு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தது. அதில் 'Ecologically Sensitive Zone - 1' (ESZ -1) என சில மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை அந்த குழு குறிப்பிட்டது. ESZ-1 என குறிப்பிடப்பட்ட பகுதிகளில் நிலத்தின் பயன்பாட்டை மாற்றி, காடு முதல் காடல்லாத பயன்பாடு, விவசாயம் முதல் விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக்கு அனுமதிக்கக் கூடாது என அந்த அறிக்கையில்
அந்த வகையில், வயநாட்டின் சுல்தான் பத்தேரி, வைத்திரி, மானந்தவாடி ஆகிய தாலுகாக்கள் ESZ-1 ஆக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், தமிழந்நாட்டின் கோத்தகிரி, கூடலூர், பொள்ளாச்சி, கொடைக்கானல், ஊட்டி, அம்பாசமுத்திரம் ஆகியவையும் ESZ-1 பகுதியாக குறிப்பிட்டிருந்தது.