ஐ.பி.எல் 2024: குஜராத் அணியில் இணைந்த மற்றொரு தமிழ்நாட்டு பிளேயர்!
சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 12 ஆம் தேதி நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.
குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆண்டு புதிய கேப்டன் தலைமையில் விளையாட இருக்கிறது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதால் இளம் வீரர் சுப்மன் கில் குஜராத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது தலைமையில் புதிய உத்வேகத்துடன் குஜராத் அணி களமிறங்க இருக்கும் நிலையில், அந்த அணியின் ஸ்டார் பவுலர் முகமது ஷமி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
அவரின் விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை சிறப்பாக பந்துவீசி ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்ற முகமது ஷமி, குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு செல்லவும் முக்கிய பங்காற்றினார்.
ஒருநாள் உலக கோப்பை போட்டியின்போதே காயமடைந்த அவர், அந்த தொடர் முழுவதும் வலி நிவாரணி எடுத்துக் கொண்டு பந்துவீசினார். இப்போது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் அவர் அடுத்து வர இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் விலகியுள்ளார்.
இந்த சூழலில் அவருடைய இடத்துக்கு தமிழ்நாட்டு வீரர் சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 50 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு குஜராத் அணியுடன் அவர் இணைந்துள்ளார். இதனை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.