பொங்கல் பரிசு தொகுப்பு : ரேஷன் கார்டு இருந்தாலும் கிடைக்காது - ஏன் தெரியுமா?
தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal gift) அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு இடம்பெறும். கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசி தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் ரொக்கம் இந்த முறை வழங்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும். ஆனால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லோருக்கும் கிடைக்குமா? என்றால் இல்லை. ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் சிலருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது.
இது உங்களுக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். ஆனால் உண்மை. ஏன் ரேஷன் கார்டு வைத்திருந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது? என்பதற்கான விடையை தெரிந்து கொள்ள, நீங்கள் முதலில் ரேஷன் கார்டு வகைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அது தெரிந்தால் இந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு கொடுப்பதில் 5 வகைகள் உள்ளன. முதலாவது, முன்னுரிமை ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) - அனைத்து பொருட்களும் கிடைக்கும். இரண்டாவது, முனுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கக்கூடிய ரேஷன் கார்டு.
மூன்றாவது முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (அரிசி அட்டை). இந்த ரேஷன் கார்டுக்கும் நியாய விலைக் கடைகளில் கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் கிடைக்கும். ஆனால், முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு (சர்க்கரை அட்டை). இந்த கார்டுக்கு அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும். சர்க்கரை வாங்கிக் கொள்ளலாம்.
ஐந்தாவது மற்றும் கடைசி பொருட்களில்லா ரேஷன் அட்டை. இந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொருட்கள் இல்லை. இவர்கள் அடையாள அட்டைக்காக இந்த ரேஷன் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது அரிசி அட்டை வைத்திருக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். சர்க்கரை ரேஷன் கார்டு அல்லது பொருளில்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியாது.
அதேபோல் பொங்கல் பரிசு தொகுப்பு பெற கட்டாயம் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் பெற்றிருக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை டோக்கன் பெறவில்லை என்றால் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படாது.