வங்கிகளில் நகை அடகு வைப்பதால் வரும் மிகப்பெரிய பிரச்சனைகள்..!

Fri, 22 Nov 2024-2:30 pm,

நகை மீது முதலீடு செய்வதே மக்களுக்கு அதிக விருப்பம். நாளுக்கு நாள் அதன் விலையேற்றம், பாதுகாப்பான முதலீடு காரணமாக நகையை பிரதான முதலீடாக மக்கள் கருதுகிறார்கள். ஆடம்பர அடையாளமாக இருக்கும் தங்க நகைகளை சிறுக சிறுகவும் சேமிக்க முடியும். ஒரு கிராம் முதல் தங்க நகைகளை வாங்க முடியும் என்பதால் சிறு சேமிப்பு மூலம் தங்க நகைகளை வாங்கி வைப்பவர்கள் ஏராளம்.

தங்கம் பாதுகாப்பான சேமிப்பு மட்டுமல்ல, ஆபத்தான நேரங்களில் மிகவும் நெருக்கடியான நேரங்களில் உடனடியாக பண தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும் உதவும். கூடுதல் விஷயம் என்னவென்றால், தங்க நகைகள் (Gold Loan) மீது கொடுக்கப்படும் கடன்களுக்கு மற்ற கடன்களைக் காட்டிலும் வட்டி விகிதம் மிக குறைவு. ஏனென்றால் கடன் கொடுப்பவர்களுக்கு தங்க நகை மூலம் ரிட்டன்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் குறைவான வட்டிக்கு தங்க நகைகள் மீது கடன் கொடுக்கின்றனர்.

பெரிய பெரிய நெருக்கடியான சமயங்களில் பலருக்கும் கை கொடுப்பது தங்க நகைகள் தான். அப்படியான தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடனுக்காக கொடுக்கும்போது ஒரு சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார அடிப்படையில் சிந்ததால் பணமும் மிச்சம், இழப்புகளும் குறைவாக இருக்கும். அதனால் தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

எப்போதும் தங்க நகைகளுக்கு குறைவான வட்டி எங்கு கொடுக்கப்படுகிறது? என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தனியார் நகை அடமான கடன்களைக் காட்டிலும் பொதுத்துறை, அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் குறைவான வட்டி விகிதத்தில் கொடுக்கப்படுகின்றன. ஆனால் தனியார் வங்கிகளில் கூடுதல் தொகை கடனாக கொடுப்பார்கள். பொதுத்துறை வங்கிகளில் குறைவான விழுக்காடு மட்டுமே கடன் கொடுப்பார்கள். 

வட்டி விகிதம் பொறுத்தவரை தனியார் வங்கிகளில் கூடுதலாகவும், பொதுத்துறை வங்கிகளில் குறைவாகவும் இருக்கும். தனியார் வங்கிகளில் நகை வைப்பது பிரச்சனையில்லை, ஆனால் தனியார் பைனான்ஸ் நிறுவனங்களில் நகைகளை அடமானம் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். கூடுதல் வட்டி விகிதம், சரியான தவணை செலுத்தவில்லை என்றால் வட்டி வட்டி போட்டு வசூலிப்பார்கள். உண்மையான நகையை மாற்றி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

அரசு, பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை அடமானம் வைத்த நகைக்கு குறிப்பிட்ட தேதிக்குள் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கட்டிவிட்டால் போதும். அது தவறும் பட்சத்தில் ஏலத்துக்கு செல்லும். இதுதான் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை. தனியார் வங்கிகளிலும் இதே நிலைதான். அரசு வங்கியிலாவது தவணை கேட்கலாம். தனியார் வங்கியில் காலம் தவறினால் நகையை முழுமையாக இழக்க நேரிடும். ஒருவேளை உங்களால் வட்டியும், அசலும் கட்ட முடியவில்லை என்றால், அந்த நகை மதிப்பை பொறுத்து நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.

சந்தை மதிப்பில் அதிக தொகைக்கு நகை விற்பனையாகிறது என்றால், அடமானம் வைத்திருக்கும் நகையை வெளியில் கடன் வாங்கியாவது அதனை மீட்டு வெளி சந்தையில் விற்பனை செய்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். ஒருவேளை மார்க்கெட் விலைக்கு நிகரான அளவில் உங்களுடைய கடன் தொகை இருக்கிறது என்றால் ஏலத்தில் விட்டுவிடுவதே உங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கக்கூடிய சிறந்த உத்தியாக இருக்கும். 

 

பெரும்பாலும் மார்க்கெட் நிலவரத்துக்கு நிகரான அளவில் அடமான நகை தொகை இருக்காது. குறைவாகவே இருக்கும். உங்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு நகையை மீட்பதையும், ஏலத்தில் விடுவது குறித்தும் முடிவெடுக்கலாம். நகையை இழக்க வேண்டாம் என நினைத்தால் குறைந்தபட்சம் வட்டியை தவணை தவறாமல் செலுத்திவிட்டாலே போதும். 

நகைகள் எப்போதும் பாதுகாப்பான சேமிப்பு என்பதால், நெருக்கடியில் இருக்கும்போது சரியாக திட்டமிட்டு கடன்களை குறைக்கும் வழிகளை ஆராய வேண்டும். அதிக வட்டி கடன்களை முதலில் குறைக்க வேண்டும். கடைசியாக குறைந்த வட்டி கடன்களை அடைக்க திட்டமிடுங்கள். நிதி நெருக்கடி எப்போதும் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், மிகவும் கவனமாக இருப்பது அவசியம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link