காதலில் செய்யவே கூடாத தவறுகள்! ‘இதை’ செய்தால் அப்பறம் எல்லாம் புட்டுக்கும்..
சினிமா, தொடர்கள் போன்ற பல விஷயங்களால் மக்கள் பயங்கரமாக ஆட்கொள்ளப்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு பெண்ணின் பின்னால் சுற்றி அவளை ‘லவ் பண்ணு லவ் பண்ணு’ என்று டார்ச்சர் செய்வதுதான் காதல் என்று பல இளைஞர்கள் நினைத்து கொண்டிருந்தனர். காதலுக்கு தவறான அர்த்தத்தை மண்டைக்குள் புகுத்தியிருப்பவர்கள் அதை விரைவில் களையவில்லை என்றால் அவர்களின் உறவில் பின்னாளில் பெரிய பிரச்சனை வரலாம். அப்படி, நாம் காதலில் செய்யக்கூடாத தவறுகள் குறித்து இங்கு பார்ப்போம்.
முதல் பார்வையில் காதல்:
பார்த்தவுடன் காதல், பார்க்காமலேயே காதல் போன்ற கதைகள் நம் ஊரில் அமரகாவியமாக பாராட்டப்பட்டாலும் நிஜ வாழ்வில் இருக்கும் நிதர்சனத்தை அவை காண்பிக்க மறந்து விடுகின்றன. நிதர்சனத்தில், ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் அவர்களை முழு மனதுடன் காதலிக்க முடியாது என்று ரிலேஷன்ஷிப் ஆலோசகர்கள் கூறுகின்றனர். ஆகவே, ஒருவரை பிடித்திருக்கிறது என்றால் முதலில் அவரை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
தீவிர ஆர்வம்:
ஒரு சிலர், “ஐயோ நீதான் என் உயிரே, நீ இல்லை என்றால் என்னால் வாழவே முடியாது, என்னை விட்டு போயிர மாட்டல்ல..” என்று பழகி 10 நாட்களுக்குள்ளாகவே டைலாக் விட ஆரம்பித்து விடுவர். இதற்கு ஆங்கிலத்தில் Love Bombing என்று பெயர். எனவே, ஒருவர் உங்களிடம் அந்த உறவின் தொடக்கத்திலேயே இப்படியெல்லாம் பேசினால் உஷாராக கழண்டு கொள்ளுங்கள், பின்னர் வரும் ஆபத்தை தடுத்து நிறுத்தலாம்.
தியாகம்:
ஒரு சிலர், தியாகம் செய்வதை எல்லாம் இன்னும் காதல் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். ஒரு உறவில் இருக்கும் இருவரும் ஓருடல் ஈருயிர் எல்லாம் கிடையாது. இருவரும் இரு வேறு தனி நபர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தனக்காக அவள் இதை செய்ய வேண்டும் என்று ஒருவர் நிர்பந்தம் செய்வது, எனக்காக என் காதலர் இதை வாங்கித்தர வேண்டும் என ஒருவர் நினைப்பதும் பிற்காலத்தில் அந்த உறவை சீர்குலைத்து விடும்.
சண்டைகள்:
எந்த உறவிலும் சண்டை வருவது சகஜம், ஆனால் சண்டையே உறவாக இருந்தால் என்ன செய்வது? ஒரு ஆரோக்கியமான உறவு ஆறுதல், சுகம், மகிழ்ச்சிம் ஆர்வம் உள்ளிட்டவற்றை தர வேண்டும். அதை விட்டுவிட்டு, இதை சொன்னால் சண்டை வந்துவிடுமோ, அதை சொன்னால் சண்டை வந்துவிடுமோ என்று பயப்படும் உறவில் இருப்பது இருவரில் ஒருவருக்கு ஆபத்தாக முடியலாம்.
சந்தேகம்:
“அவனுக்கு நான் பிற ஆண்களிடம் பேசினால் பிடிக்காது. அவளுக்கு என் தோழிகளிடம் நான் பேசினால் பிடிக்காது” என்று சில காதல் ஜோடிகள் சிரித்துக்கொண்டே பேசுவதை கேட்டிருப்போம். இப்படி சந்தேகம் கொள்வது ஒன்றும் க்யூட்டான விஷயம் கிடையாது. இந்த சந்தேகம், ஒரு நாள் பேயாக உருவெடுத்து இருவரையும் ஆட்டிப்படைக்கும்.
காதலரை/காதலியை சரி செய்தல்:
யாரும், யாரையும் இங்கு சரி செய்ய பிறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு மனதில் பிரச்சனை இருக்கிறது என்றால் அதை சரி செய்து கொள்ள வேண்டியது அவரது கடமை. அதை விட்டுவிட்டு, ‘நான் எனது காதலால் அவரை சரி செய்வேன்’ என்று வசனம் பேசுவதெல்லாம் படத்திற்கு உதவலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் யாரேனும் அப்படி இருந்தால் விபூதி அடித்து விடுவார்கள்.