குழந்தைகளை ஆன்லைனில் உஷாராக பார்த்துக்கொள்வது எப்படி? இதோ டிப்ஸ்!
பல குழந்தைகளுக்கு, இன்று கல்வி பயிலும் காரணத்திற்காக செல்போன் என்பது இன்றியமையாததாக இருக்கிறது. எந்த டெக்னாலஜி சாதனத்தை எடுத்தாலும் அதில் நன்மைகள் இருப்பது போல தீமைகளும் கூடவே இருக்கின்றன. ஆன்லைன் கேம் மூலமாக தந்தையின் 3 லட்சம் பணத்தை செலவு செய்த சிறுவன், தாயின் கிரெடிட் கார்டை வைத்து 11 லட்சத்தை ஆன்லைன் கேமில் செலவு செய்த சிறுவன், என பல்வேறு செய்தி தலைப்புகளை பார்த்துதான் வருகிறோம். இப்படி அவர்களுக்கே தெரியாமல் பர்சுக்கு உலை வைக்கும் குழந்தைகள், சமயங்களில் ஆன்லைனில் உஷாராக இருப்பதில்லை. அவர்களை ஆன்லைனில் பத்திரமாக பார்த்துக்கொள்வதற்கான டிப்ஸ், இதோ!
10 வயதிற்கும் கீழுள்ள குழந்தைக்கு இணையதளமும் செல்போன் பயன்பாடும் முதலில் தேவை தானா என்று யோசிக்க வேண்டும். அப்படியே அவர்கள் செல்போனை உபயோகித்தாலும் உங்கள் கண்காணிப்பில் அவர்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 10 வயதிற்கும் அதிகமான குழந்தையாக இருந்தால் அவர்களுக்கு கல்விக்காக மட்டும் சில நிமிடங்கள் செல்போனை உங்கள் கண்காணிப்பில் கொடுக்கலாம்.
குழந்தைகள் பலர், தங்களது தனி நபர் உரிமைகளை ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களை நம்பி கொடுத்து விடுவர். அதனால், அவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் யாரிடமும் கொடுக்க கூடாது என்பதை தெரியப்படுத்துங்கள்.
குழந்தைகளை கண்காணிக்க Parental Controls செட்டிங்க்ஸ் இருக்கின்றன. இதை செயல்படுத்திய செல்போன்களை குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
ஒரு சில ஆப்களுக்கு, “இவ்வளவு நேரம்தான் இண்டர்நெட்டை உபயோகிக்க முடியும்” அந்த அமைப்பை, அவர்கள் மொபைலில் அதிகம் உபயோகிக்கும் ஆப்களுக்கு ஆன் செய்து விட்டு கொடுக்கவும்.
ஆன்லைனில் கேம் விளையாடுவதற்காக கொடுக்கிறீர்கள் என்றால், அவர்களை உங்களது கண்காணிப்பிலேயே வைத்திருங்கள். அதுவும், அதற்கான வரையறுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கொடுக்கவும்.
பல சமூக வலைதளங்கள், குழந்தைகளுக்கானதாக இருப்பதில்லை. 13வயது என்பது குழந்தைகள் சமூக வலைதளத்தை வைத்திருக்க உகந்த வயதாக இருக்கிறது. ஆனால், அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கும் எப்படி சமூக வலைதளங்களை கையாள்வது என்பது தெரியாது. எனவே, இது குறித்த அறிவை அவர்களுக்கு முதலில் புகட்ட வேண்டும்.