Tech Tips: புயல் காலத்தில் கைக்கொடுக்கும்... இதை செய்தால் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!
பெஞ்சல் புயல் கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல பகுதிகளில் கனமழை பெய்தாலும், புயல் இன்று கரையை கடந்தபோதும் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்துள்ளது.
அதி கனமழை காரணமாக புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் ஒருநாளில் 50 செ.மீ., அளவுக்கும் மேல் புதுச்சேரியில் தற்போது மழை பெய்திருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போதைய நவீன காலகட்டத்தில் இதுபோன்ற அவசர காலகட்டங்களில் பால், காய்கறிகள், அரிசி போன்ற பலசரக்கு பொருள்களை வாங்குவதற்கு பலரும் Gpay, Phonepe, Paytm போன்ற UPI சேவைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த சேவைகளை பயன்படுத்த அடிப்படையாக இணைய வசதி தேவை. மழைக்காலங்களில் இணைய வசதி தடைப்பட்டால் இந்த செயலிகள் மூலம் பணம் அனுப்ப இயலாது. ஆனால், இந்த செயலிகளில் இருக்கும் UPI Lite வசதி மூலம் நீங்கள் இணைய வசதியே இல்லாமலும் மற்றவருக்கு பணம் அனுப்பலாம்.
அதாவது, முதலில் UPI Lite வேலட்டில் ரூ.2,000 வரை டாப்அப் செய்துவைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனையில் ரூ.500 வரை அனுப்பலாம். ஆனால், தற்போது நீங்கள் ரூ.5,000 வரை டாப்அப் செய்துகொள்ளலாம் மற்றும் ஒரு பரிவர்த்தனையில் ரூ.1000 வரை அனுப்பலாம் என ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.
முன்னர் கூறியது போல், இந்த வசதி Gpay, Phonepe, Paytm போன்ற UPI அடிப்படையாக வைத்து இயங்கும் செயலிகளில் கிடைக்கும். இந்த வசதியை தேர்வு செய்து, முதலில் டாப் செய்துவைத்துக்கொண்டால் நீங்கள் 1000 ரூபாய்க்கு கீழ் செய்யும் அனைத்து பரிவர்த்தனையையும் இதிலேயே செய்யலாம்.
Paytm செயலியில் UPI Lite வேலட்டில் பணம் தீர்ந்துவிட்டால், ஆட்டோமேட்டிக்காகவே டாப்-அப் செய்யும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு டாப்-அப் செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் முன்னரே தீர்மானித்துக்கொள்ளலாம்.
உங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லையென்றாலும், UPI123Pay மூலம் நீங்கள் ரூ.10 ஆயிரம் வரை பணம் அனுப்பலாம். இந்த வசதியும் உங்களுக்கு அவசர காலத்தில் கைக்கொடுக்கும்.