நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதி!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள வேட்டையன் படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில், நேற்று இரவு சில பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
என்ன காரணத்திற்காக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி அவரது குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது மருத்துவமனை தரப்பிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் திங்கள்கிழமை இரவு திடீர் என்று சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்றும், மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்த் சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
நாளை அக்டோபர் 2 ஆம் தேதி வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர்.