வினேஷ் போகத் கடந்து வந்த `ஓராயிரம்` சோதனைகள்... இந்த கஷ்டம் யாருக்குமே வரக்கூடாது!

Wed, 07 Aug 2024-2:56 pm,

2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்தான் (Rio Olympics 2016) வினேஷ் போகத்தின் முதல் ஒலிம்பிக் ஆகும். முதல் சுற்றில் 11-0 என்ற ஆதிக்கத்தில் வெற்றி பெற்ற அவருக்கு காலிறுதியில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. காலிறுதிப்போட்டியில் சீன வீராங்கனை சுன் யானன் தெரியாமல், வினேஷின் காலில் விழுந்ததால், அவர் கடுமையாக காயமடைந்தார். 

 

வினேஷின் (Vinesh Phogat) வலது காலில் அப்போது ஏற்பட்ட காயத்தால் அவரால் தொடர்ந்து விளையாடவே முடியவில்லை. அவர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஸ்ட்ரெச்சர் மூலம்தான் அவர் மல்யுத்த களத்தில் இருந்தே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். 

 

இதனை தொடர்ந்து அவரின், வலது காலில் ACL என்ற தசைநாரில் முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின் அவரின் காயம் குணமடைய 5 மாதங்கள் எடுத்தது. அப்போதே பயிற்சியை தொடங்கினாலும் 2018இல் தான் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். அந்தளவிற்கு அந்த காயம் அவரின் வாழ்வில் பெரும் தாக்கம் செலுத்தியது. 

 

53 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் (Tokyo Olympics 2020) கடந்த 2021ஆம் ஆண்டு போட்டியிட்ட வினேஷ் போகத் முதல் சுற்றை சிறப்பாக நிறைவு செய்தார். ஆனால், வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வியடைந்தார். அந்த தோல்விக்குப் பிறகு, டோக்கியோவில் வினேஷ் போகத்தின் நடத்தைக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI) உத்தரவிட்டது. அதன்பின்னர், அவரின் அந்த இடைநீக்கத்தை WFI திரும்பப் பெற்றது.

 

2021 உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெறுவதற்கான தேசிய அளவிலான போட்டியின் போது வினேஷ் போகத்திற்கு தோள்படையில் காயம் ஏற்பட்டது. இந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறி, சில நாள்களில் அவரது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் சமூக வலைத்தளப் பதிவில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். "தோள்பட்டை சிகிச்சை முடிந்தது. எத்தனை முறை வீழ்ந்தாலும் சரி, நான் எழுந்துகொண்டே இருப்பேன்" என்றார். 

 

அதேபோல், 2021இல் தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பின்னர் 2022இல் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும், காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்று சொன்ன சொல்லை காப்பாற்றினார். இருப்பினும், 2023இல் இரண்டாவது முறையாக தோள்பட்டை அறுவை சிகிச்சையை செய்துகொண்டார். 

 

அதேபோல், கடந்தாண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருந்த வினேஷ் போகத்திற்கு மற்றொரு காயமும் இடைமறித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பயிற்சியின் போது அவரின் இடது காலின் முட்டியில் காயம் ஏற்பட்டது. அதிலும் அவருக்கு ACL என்ற தசைநாரில் முறிவு ஏற்பட்டது, LCL தசைநாரும் பாதிப்படைந்தது. இதனால் அவர் மீண்டும் இடது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 

 

இதற்கிடையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் (Brij Bhushan Singh) மேல் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, சக வீராங்கனைகளுக்கு ஆதரவாக வினேஷ் போகத் வீதியில் இறங்கி, வீதியிலேய உறங்கி கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். நீதிக்காக போராடிய வினேஷ் போகத்திற்கும் சரி, மற்ற வீராங்கனைகளுக்கும் கடைசி வரை ஏமாற்றம் மட்டுமே பரிசளிக்கப்பட்டது. 

 

இத்தனை துயரிலும், பாரிஸ் ஒலிம்பிக் (Paris Olympics 2024) தொடருக்கு தகுதிபெறவே அவருக்கு கடுமையான சோதனைகள் இருந்தன. அவை அனைத்தையும் முறியடித்து பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றார். 53 கிலோ எடைப்பிரிவில் இருந்து 50 கிலோ எடைப்பிரிவுக்கு மாறிய வினேஷ் போகத் பல மாதங்களாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். உடல் எடையை பராமரிக்க தலைமுடியை கூட வெட்டிய வினேஷ் போகத், தனது நரம்புகளில் இருந்து ரத்தத்தையும் கூட இழக்க துணிந்தார். 

 

இவை அனைத்தையும் செய்தும் துரதிருஷ்டவசமாக 100 கிராம் எடை அதிகரித்துவிட்டதால் இறுதிப்போட்டியை விளையாட இயலாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வினேஷ் போகத் வெறுங்கையுடன் வெளியேறியிருக்கிறார். அவரின் ஒலிம்பிக் பதக்க கனவு சுக்கு நூறாக உடைந்துவிட்டது. ஆனாலும் அவருக்கு துணை அவரின் வார்த்தைகளே... வினேஷ் போகத் எத்தனை முறை வீழ்ந்தாலும் சரி, அவர் எழுந்துகொண்டே இருப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link