உலக கோப்பை டிக்கெட் மட்டும் என்கிட்ட கேட்காதீங்க ப்ளீஸ் கேட்காதீங்க - விராட் கோலி கலகல
உலகக்கோப்பைத் தொடர் நாளை முதல் தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறுவதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண டிக்கெட் வேண்டிக் காத்திருக்கின்றனர்.
உலகக்கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. ஏறக்குறைய மூன்று கட்டங்களாக டிக்கெட் விற்பனை நடந்திருந்தது. சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடைபெறவிருக்கிறது.
அதுதான் இந்த ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி. அதற்கான இறுதிக்கட்ட டிக்கெட் விற்பனைகூட நேற்று ஆன்லைனில் நடந்திருந்தது. பலமணி நேரமாக ஆன்லைன் வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடனே வெளியேறியிருந்தனர்.
டிக்கெட்டுக்கான டிமாண்ட் அந்தளவுக்கு கடுமையாக எகிறியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் டிக்கெட்டுகள் குறித்து விராட் கோலி நகைச்சுவையாக இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
'உலகக்கோப்பை நெருங்கிவிட்டது. என்னுடைய நண்பர்களிடம் பணிவாக ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன், இந்தத் தொடர் முழுவதும் யாரும் என்னிடம் டிக்கெட் கேட்டு அணுக வேண்டாம். வீட்டிலிருந்தே மகிழ்ச்சியாக போட்டிகளைக் கண்டு களியுங்கள்!' என கோலி கூறியிருக்கிறார்.
கோலியின் இந்த ஸ்டோரியை குறிப்பிட்டு அவரின் மனைவியான அனுஷ்கா ஷர்மாவும் ஜாலியாக ஒரு ஸ்டோரியை பதிவிட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, 'கோலி உங்களின் மெசேஜ்களுக்கு ரீப்ளை செய்யவில்லையெனில் என்னிடம் உதவி கேட்டு வர வேண்டாம். உங்களின் புரிதலுக்கு நன்றி!' என ஸ்மைலிக்களை பறக்கவிட்டிருக்கிறார்.