15000, 12000, 10000 அபராதம் விதிக்கப்படும்.. வீடு, மனை விற்பவருக்கு முக்கிய அறிவிப்பு
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5381 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களை ஆணயத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், ரியல் எஸ்டேட் புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.
புதிய உத்தரவு படி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது அதுவும் ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ. 3 லட்சம் ரூபாய் வரை என பொதுவான கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான நடைமுறைகளை மாற்ற ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு மற்றும் மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் திருப்பூர், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் தலா ரூ. 12,000 அபராதம் விதிக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
சென்னை பெருநகர எல்லையில் வரும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி, கும்பகோணம், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் தலா, ரூ10,000 அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் நகராட்சிகளில் வீடு, மனை விற்றால் தலா, ரூ. 6,000, பேரூராட்சிகளில் தலா ரூ. 4,000, ஊராட்சிகளில் தலா, ரூ.3,000 என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் துறையின் வெப்சைட்டுக்கு சென்று உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளலாம்.
அபராதத்தொகை விதிக்கும் போது மனைப்பிரிவு திட்டங்களின் அதன் மொத்த மதிப்பில் 2% அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என்றால் அதில் விற்கப்பட்ட வீடு மதிப்பில் 1% என இரண்டில் எது அதிகம் என்ற அடிப்படையில் அபராதத்தொகை முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.