அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் புதிய டெல்லி முதல்வர் அதிஷி சொன்னது என்ன?

Tue, 17 Sep 2024-5:42 pm,

2012ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) உள்பட பலரால் தொடங்கப்பட்டது. அதில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை ஒருங்கிணைப்பாளராக தேர்வானார். 2013ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதில், முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். இருப்பினும், 49 நாள்களில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார். 

 

சட்டப்பேரவையில் ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு போதிய ஆதரவு திரட்ட இயலாத காரணத்தை கூறி அவர் முதல்வர் பொறுப்பை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது. அதன்பின்னர், 2015 சட்டப்பேரவை தேர்தலிலும், 2020 சட்டப்பேரவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றி டெல்லியில் (Delhi) ஆட்சியமைத்தது. 

 

2015இல் இருந்து சுமார் 9 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைதாகி சிறை சென்று, சுமார் 5 மாதங்களுக்கு பின் கடந்த செப். 13ஆம் தேதி ஜாமினில் வெளிவந்தார். 

 

பிணையில் வெளிவந்ததும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், 2025ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பின்னரே முதல்வர் பதவியை ஏற்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

 

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினாவை முதலமைச்சர் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளனர்.

 

இந்நிலையில், டெல்லி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி மர்லினா புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரினார். 

 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அதிஷி மர்லினா,"அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்தார். இது ஆம் ஆத்மி கட்சிக்கும், டெல்லி மக்களுக்கும் உணர்ச்சிக்கரமான தருணம் ஆகும். அதே நேரத்தில், கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மேலும், தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமையும் வரை டெல்லியை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார். 

 

முன்னதாக அதிஷி மர்லினா முதல்வராக தேர்வான பின்னர் பேசியபோது,"அரவிந்த் கெஜ்ரிவால் என்னை நம்பினார். ஆம் ஆத்மி கட்சி என்னை நம்பியது. அதனால்தான் எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அதேநேரத்தில் ​​​​அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. டெல்லிக்கு ஒரே ஒரு முதல்வர் மட்டுமே இருக்கிறார்... அது கெஜ்ரிவால் மட்டும்தான்" என கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link