Breast Pain: மார்பகத்தில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
மார்பகத்தில் ஏற்படும் வலியை ஆங்கிலத்தில் மாஸ்டால்ஜியா என குறிப்பிடுவர். இது, இயல்பாக அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மார்பகத்தில் அசௌகரியம், வலி போன்ற உணர்வுகள் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படலாம். இதற்கு பின்னால் பல மருத்துவ காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவை என்னென்ன காரணங்கள்?
மார்பகத்தில் வலி ஏற்படுவதற்கு பின்னால் ஹார்மோன் பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள், போன்ற பல காரணங்கள் இருக்கலாம். மார்பக கட்டி, நார்சத்து குறைபாடு, அதீத தசை பயிற்சி போன்றவையும் இதற்கு முக்கிய காரணியாக இருக்கலாம்.
உடலில் எஸ்ட்ராஜன் மற்றும் ப்ரோகெஸ்ட்ரோனின் அளவுகள் மாதவிடாய் சமயங்களில் அதிகரிக்க செய்யலாம். இதனால் மார்பக பகுதியில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம். மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து இந்த வலி ஆரம்பிக்கும். வயிறு உப்பசமாவது, மார்பகம் பெரிதானது போன்ற தோற்றம் ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும். மாதவிடாய்க்கு பிறகு இவை சரியாகிவிடும்.
மார்பகத்தில் நீர்கட்டிகள் ஏற்படும். இவை, மார்பக திசுக்களுக்குள் திரவம் நிறைந்த கட்டிகளாகும். இவை மாஸ்டல்ஜியா எனப்படும் மார்பக வலியை ஏற்படுத்தும். இதனால் கட்டி வந்த இடத்தில் மட்டும் வலி ஏற்படும், மார்பக பகுதியில் அசௌகரியம் உண்டாகும். மாதவிடாய் சமயத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் இந்த வலி தீவிரமாக மாறலாம். இவற்றை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
சில சமயங்களில், மார்பக புற்றுநோயுடன் தொடர்பில்லாத கட்டிகள் மார்பக பகுதிகளில் ஏற்படலாம். இதனால் அவ்வப்போது மார்பக பகுதிகளில், குறிப்பாக அந்த கட்டி இருக்கும் இடங்களில் வலி ஏற்படும். இதுவும் ஹார்மோன் மாறுபாடுகளால்தான் ஏற்படுகின்றன. இந்த கட்டி தென்பட்டவுடன் மருத்துவர்களை நாடுவது சிறந்தது.
மார்பக பகுதிகளில் அடிப்பட்டாலோ அல்லது அந்த இடத்திற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்திருந்தாலோ வலி ஏற்படலாம். உடற்பயிற்சி செய்கையில், மார்பகத்திற்கு அதிக அளவில் அழுத்தம் கொடுக்கும் வகையில் பயிற்சி செய்தாலும் இந்த வலி ஏற்படும். இவை நிரந்தர வலியாக இருக்காது. சில மணி நேரம் ஓய்வெடுத்தாலே இந்த வலி சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு பால் கொடுப்பதினாலும் மார்பக பகுதிகளில் வலி ஏற்படலாம். பால் கட்டி விட்டாலோ, முறையற்ற வகையில் குழந்தைக்கு பால் கொடுத்தாலோ இது போன்ற வலி ஏற்படும். இதனால் மார்பகம் வீங்கியது போன்று காட்சியளிக்கும். இது போன்ற வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
அடிக்கடி எடை இழப்பு ஏற்படுதல், எப்போதும் சோர்வுடன் இருத்தல், தொடர் இருமல் போன்ற அறிகுறிகளுடன் மார்பகத்தில் வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.