ரிஷப் பண்ட் மெகா ஏலத்திற்கு வந்தால்... கப்புனு தூக்கக் காத்திருக்கும் இந்த 3 அணிகள்!
ஐபிஎல் 2024 மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) குறித்த விதிகள் கடந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 5 Capped வீரர்கள், குறைந்தபட்சம் 1 Uncapped வீரர்கள் என மொத்தம் 6 வீரர்களை தக்கவைக்கலாம்.
ஏலத்திற்கு முன்னரும், ஏலத்தில் RTM மூலமும் அணிகள் இந்த 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். வரும் அக். 31ஆம் தேதிக்குள் அணிகள் தங்களின் தக்கவைப்பு பட்டியலை பிசிசிஐயிடம் அளிக்க வேண்டும்.
அந்த வகையில், முன்னணி அணிகள் எந்தெந்த முன்னணி வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரோஹித் சர்மா (Rohit Sharma), கேஎல் ராகுல் (KL Rahul) ஆகியோர் முறையே மும்பை, லக்னோ அணிகளால் தக்கவைக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அவரது X பக்கத்தில்,"நான் ஏலத்திற்கு வரும்பட்சத்தில், அணிகளால் நான் எடுக்கப்படுவேனா இல்லையா... எவ்வளவு தொகைக்கு எடுக்கப்படுவேன்...?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை, ரிஷப் பண்ட் (Rishabh Pant) மெகா ஏலத்திற்கு வரும்பட்சத்தில், இந்த மூன்று அணிகள் அவரை எடுக்க முட்டிமோதும் எனலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி (MS Dhoni) ஒருவேளை இந்த சீசனை விளையாடாவிட்டாலோ, விளையாடினாலோ நிச்சயம் சென்னை அணி (Chennai Super Kings) ரிஷப் பண்டை எடுக்கலாம். காரணம், தோனிக்கு பின் ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர் சிஎஸ்கேவில் இல்லை. ருதுராஜ் கேப்டனாக இருந்தாலும் கூட ரிஷப் பண்ட் அணியில் நீடிக்கும்போது நிச்சயம் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு சிஎஸ்கேவுக்கு பிரச்னையே இருக்காது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: தினேஷ் கார்த்திக் ஓய்வுக்கு பிறகு அனுபவம் வாய்ந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ஆர்சிபிக்கு (Royal Challengers Bangalore) தேவை. அதுமட்டுமின்றி நிச்சயம் ஒரு கேப்டனும் ஆர்சிபிக்கு தேவை. எனவே, சிஎஸ்கேவை விட ஆர்சிபி அணி ரிஷப் பண்டை எடுப்பதே சரியாக இருக்கும். நிச்சயம் ஆர்சிபி ரூ.20 கோடி - ரூ.22 கோடி கொடுத்தாவது ரிஷப் பண்டை எடுக்கும் எனலாம்.
பஞ்சாப் கிங்ஸ்: பஞ்சாப் அணி நிச்சயம் ஓரிரு Uncapped வீரரை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு செல்லும் எனலாம். அப்படியிருக்க ஏலத்திற்கு பஞ்சாப் அணி (Punjab Kings) பெரிய தொகையுடனும் வரும். எனவே, ஏலத்தில் ரிஷப் பண்டை எடுக்க பஞ்சாப் அணி பெரிய தொகையை ஒதுக்கும். தற்போது டெல்லி பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், பஞ்சாப் அணிக்கு வந்திருக்கும் சூழலில் ரிஷப் பண்ட்டும் பஞ்சாப் அணிக்கு வந்தால் அது பெரிய விஷயமாக இருக்கும்.