Mucormycosis எனப்படும் கருப்பூ பூஞ்சை: அறிகுறிகள், சிகிச்சை, முன்னெச்சரிக்கை: முழு விவரம் இதோ
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்து, கருப்பு பூஞ்சை பற்றிய தகவல்களை அளித்தார். இந்த நோயின் விவரங்கள், யாருக்கெல்லாம் இதற்கான ஆபத்து உள்ளது, கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் என்ன, நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று விளக்கியுள்ளார். சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, இந்த நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருந்து, அறிகுறிகள் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டால், இந்த நோய் அபாயகரமானதாக உருவெடுப்பதைத் தடுக்கலாம்.
கருப்பு பூஞ்சை என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இது கொரோனா வைரஸ் காரணமாக உடலில் ஏற்படுகின்றது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கருத்துப்படி, கருப்பு பூஞ்சை என்பது உடலில் மிக வேகமாக பரவுகின்ற ஒரு அரிய நோயாகும். மேலும் இது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கு முன்பு வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் காணப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக உள்ளவர்களையும் இது அதிகமாக பாதிக்கிறது.
pic credit: rdrharshvardhan twitter
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தனது ட்வீட் மூலம், யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது என்பதை தெரிவித்தார். ஹர்ஷ் வர்தனின் கூற்றுப்படி, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாதவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்கள், ஸ்டெராய்டுகளை உட்கொள்ளும் நபர்கள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீண்ட காலமாக ஐ.சி.யு, மருத்துவமனைகளில் இருந்தவர்கள், உறுப்பு மாற்று மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், மிகவும் கடுமையான பூஞ்சை தொற்று ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு கருப்பு பூஞ்சைக்கான அதிக ஆபத்து உள்ளது.
pic credit: rdrharshvardhan twitter
கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டால், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும்:
- கண்களில் அல்லது கண்களைச் சுற்றி சிவப்பாக இருப்பது அல்லது வலி இருப்பது - அடிக்கடி காய்ச்சல் - தலையில் கடுமையான வலி - சுவாசம் மற்றும் மூச்சுத் திணறல் - இரத்த வாந்தி - மன நிலையில் மாற்றம் pic credit: rdrharshvardhan twitter
என்ன செய்ய வெண்டும்
நோயாளி ஹைப்பர் கிளைசீமியாவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதாவது நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கோவிட் -19 ல் இருந்து மீண்டு, மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், வீட்டிற்கு வந்த பிறகும் இரத்த குளுக்கோஸ் அளவை குளுக்கோமீட்டரின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஸ்டெராய்டுகளை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மருந்துகளுக்கான சரியான அளவுகள் மற்றும் நேர இடைவெளிகளை அறிய வேண்டும். மேலும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
என்ன செய்யக்கூடாது
நோயின் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். மூக்கு அடைபட்டால், அது சைனஸ் பிரச்சனை தான் என எண்ணி அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். குறிப்பாக கோவிட் -19 நோயாளிகள் மூக்கடைப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு சந்தேகம் வந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முக்கோராமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் நோயாளி இறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், அறிகுறிகளைக் கண்டறிந்த பிறகு சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது மிகவும் முக்கியம். pic credit: rdrharshvardhan twitter
கறுப்பு பூஞ்சை கோவிட் தொற்றுநோயிலிருந்து மீண்ட நோயாளிகளின் கண்பார்வையை பறிப்பது மட்டுமல்லாமல், இந்த பூஞ்சை தோல், மூக்கு மற்றும் பற்கள் மற்றும் தாடையையும் சேதப்படுத்துகிறது. மூக்கு வழியாக, இது நுரையீரல் மற்றும் மூளையை அடைந்து நோயாளியின் உயிரை எடுக்கும் அளவு அபாயகரமானது. இது ஒரு தீவிர நோயாகும். நோயாளியை நேரடியாக ஐ.சி.யுவில் அனுமதிக்க வேண்டும். எனவே, அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிவது மிகவும் முக்கியம்.