IPL Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது, எங்கு நடக்கிறது...? வெளியான தகவல்
இந்திய கிரிக்கெட் இப்போது பெரும் பரபரப்பில் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்த கையோடு, இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட செல்கிறது.
நவ.22ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை பார்டர் கவாஸ்கர் தொடரில் (Border Gavaskar Trophy) இந்தியா - ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இந்த தொடரை இந்தியாவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் ஒளிபரப்பாகும்.
இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் மெகா ஏலமும் (IPL 2025 Mega Auction) இந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஐியோ சினிமாஸ் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாகும்.
அதுவும் ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய இரண்டு நாள்கள் சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பெர்த் டெஸ்ட் நவ.22ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்த டெஸ்ட் போட்டியின் போதே ஐபிஎல் மெகா ஏலமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தால் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.
எனவே, இவை இரண்டையும் வெவ்வேறு நேரத்தில் ஒளிபரப்ப திட்டமிடுவார்கள். இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 7.05 மணிக்கு தொடங்கும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் இந்திய நேரப்படி மதியம் நடைபெறலாம்.
தற்போதைய மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் ஜாஸ் பட்லர், எய்டன் மார்க்ரம், கிளென் மேக்ஸ்வெல், ஃபாப் டூ பிளெசிஎஸ் உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு வீரர்களும் ஏலத்திற்கு வர உள்ளார்கள்.