ரேஷன் கடையில் யார் யாருக்கு 35 கிலோ அரிசி கிடைக்கும்?
தமிழ்நாட்டில் 5 வகை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. முன்னுரிமை அட்டைகள் (PHH), முன்னுரிமை அந்தியோதய அன்னயோஜனா (PHH-AAY), முன்னுரிமையற்ற அட்டைகள் (NPHH), சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S), பொருளில்லா அட்டை (NPHH-NC) ஆகிய வகைகள் ரேஷன் கார்டில் இருக்கின்றன.
இதில், முன்னுரிமை அட்டைகளுக்கு சர்க்கரை உள்ளடக்கிய அனைத்து பொருட்களும் கிடைக்கும். முன்னுரிமை அந்தியோதய அன்னயோஜனா (PHH-AAY) அட்டைகளுக்கு மட்டும் 35 கிலோ அரிசி உட்பட அனைத்தும் பொருட்களும் கிடைக்கும். முன்னுரிமையற்ற அட்டைகள் (NPHH) அரிசி உட்பட அனைத்து பொருட்களும், சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S) அரிசியை தவிர அனைத்து பொருட்களும், பொருளில்லா அட்டை (NPHH-NC) எந்த பொருளும் கிடைக்காது.
இதில் அந்தியோதய அன்னயோஜனா (PHH-AAY) அட்டைகள் யாருக்கு கிடைக்கும் என்றால் விதவைகள், நோய்வாய்ப்பட்ட நபர்கள், ஊனமுற்ற நபர்கள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் குடும்பம் அல்லது சமூக ஆதரவு அல்லது உறுதியான வாழ்வாதார வழிமுறைகள் இல்லாதவர்கள். அனைத்து பழமையான பழங்குடி குடும்பங்கள், எச்.ஐ.வி பாதித்தவர்கள், தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர்கள், நகர்ப்புற வீடற்றவர்கள் ஆகியோர் பெறுவார்கள்.
இவர்கள் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் பெற்று ரேஷன் அட்டை மூலம் 35 கிலோ அரிசி பெற தகுதியானவர்கள். இந்த திட்டம் எல்லா மாநிலத்திலும் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் குறைந்தபட்ச செலவாக மத்திய அரசு நிர்ணயித்தபோதிலும், தமிழ்நாட்டில் இந்த அரிசி இலவசமாக கொடுக்கப்படுகிறது.
ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது எந்தவகை கார்டு வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். உங்களின் பொருளாதார சூழல் மற்றும் வறுமை கோடு அளவுகோல்களை வைத்து, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு வழக்கல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
உங்கள் விண்ணப்பத்தில் குறிபிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்றால், குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த ரேஷன் கார்டு கிடைக்கும். தகவல்கள் மாறுபட்டால் ரேஷன் கார்டு விண்ணப்பம் ரத்து செய்யவும் வாய்ப்புகள் உண்டு.
அதனால் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக தவறான தகவல்களை கொடுத்தால் உங்கள் விண்ணப்பம் பரிசீலனையிலேயே நிராகரிக்கப்படும்.