இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்வது, டயட்டில் இருப்பது என்று ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். இது தவிர எடை குறைப்பு மாத்திரை, பவுடர் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். இவை சிலருக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
உடல் எடையை குறைக்க பலரும் செய்யும் முதல் விஷயம் உணவைத் தவிர்ப்பது ஆகும், குறிப்பாக இரவு நேர உணவு. இரவு உணவைத் தவிர்ப்பதால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை.
இரவு உணவு தூங்கும் முன் உடலுக்கு தேவையான கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இரவு முழுவதும் எந்த உணவையும் நாம் சாப்பிட போவது இல்லை என்பதால் தூங்கும் முன் நன்றாக சாப்பிட வேண்டும்.
இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் அதே வேளையில், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பாதித்து, சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும்.
அதே போல இரவு உணவைத் தவிர்ப்பது சர்க்கரை அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மேலும் இரவு உணவைத் தவிர்ப்பது மன நலனில் தீங்கு விளைவிக்கும். அதே போல பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.