பணக்கார கிரிக்கெட் வீரர்களில் தோனிக்கு எத்தனாவது இடம்?
1. சச்சின் டெண்டுல்கர்:
சச்சின் டெண்டுல்கரை பலரும் 'கிரிக்கெட்டின் கடவுள்' என்று போற்றுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் உலகின் டாப் 5 பணக்கார கிரிக்கெட் வீரர்களில் இவர் தான் முதல் இடத்தை பிடிக்கிறார். இவர் பிரபல டயர் பிராண்ட் எம்ஆர்எப் உட்பட பல சிறந்த பிராண்டுகளுடன் இணைப்பில் உள்ளார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 870 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இவருக்கு மும்பையில் சொந்தமாக அவருக்கு 38 கோடி ரூபாயில் சொகுசு வீடு ஒன்றும் உள்ளது.
2. எம்எஸ் தோனி:
இந்திய கிரிக்கெட் வீரர் மஹிந்திரா சிங் தோனி இதுவரை விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவராக புகழப்படுகிறார். இவரை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமுடியாது, அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியை தனது தலைமையின் கீழ் வழிநடத்தி நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சேரும். உலகின் டாப் 5 பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இவர் இரண்டாவது இடத்தை வகிக்கிறார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 840 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இன்றளவும் இவர் பல பிராண்டுகளின் விருப்பப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறார், அதோடு ஓரியண்ட், வளைகுடா ஆயில், ரீபோக் போன்ற பல பிராண்டுகளுடன் தொடர்பில் இருக்கிறார்.
3. விராட் கோலி:
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலகம் முழுவதிலும் அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். உலகின் டாப் 5 பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தை வகிக்கிறார். இவர் புமி, ஆடி, எம்ஆர்எப் போன்ற சில முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களில் இவரது முகம் தான் உள்ளது. இவர் விளம்பரங்களின் மூலம் மட்டும் 196 கோடி சம்பாதித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது. இவரது தற்போதைய சொத்து மதிப்பு 638 கோடி ரூபாய் ஆகும், இதுதவிர இவர் தனக்கு சொந்தமாக ராக்ன் மற்றும் ஒன்8 போன்ற ஃபேஷன் பிராண்டுகளை நடத்தி வருகிறார்.
4. ரிக்கி பாண்டிங்:
எப்பொழுதும் சிறந்த கேப்டன் என்று கூறப்படும் ரிக்கி பாண்டிங் உலகின் டாப் 5 பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை வகிக்கிறார். ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட் வீரரான இவர் பல தொழில்கள் மூலம் அதிகமாக சம்பாதித்து இருக்கிறார், இவரின் தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 492 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாது இவருக்கு 69.8 கோடி ரூபாயில் சொகுசு வீடு ஒன்றும் உள்ளது, அது மெல்போர்னில் உள்ள பிரைட்டனின் உயர்தர கோல்டன் மைலில் அமைந்துள்ள 'ஷான்ஃபோர்ட் மேன்ஷன்' ஆகும். மேலும் இவருக்கு சொந்தமாக ஒரு தியேட்டர், ஒரு குளம், ஒரு பில்லியர்ட் அறை மற்றும் டென்னிஸ் மைதானம் ஒன்றும் உள்ளது.
5. பிரையன் லாரா:
'பிரின்ஸ் ஆஃப் போர்ட் ஆஃப் ஸ்பெயின்' என்று அழைக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகளின் சிறந்த வீரரான பிரையன் லாரா இன்று டாப் 5 பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை வகிக்கிறார். 1990 முதல் 2007 வரை தனது கிரிக்கெட் பயணத்தை மேற்கொண்டு சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் எடுத்து இவரின் மிகப்பெரிய சாதனையாகும், இன்றளவும் இந்த சாதனையை யாராலும் முறியடிக்கப்பட முடியவில்லை என்பது கூடுதல் சிறப்பானது. இவரது தற்போதைய சொத்து மதிப்பு 454 கோடி ரூபாய் ஆகும், மேலும் இவருக்கு டிரினிடாட்டில் சொந்தமாக ஒரு சொகுசு வீடும் உள்ளது.