நேபாள பிரதமர் சர்மா ஒலி நேபாளத்தின் பிரதமராக 2-வது முறையாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அவர், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்ற கே.பி. ஒலி, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு தில்லிக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், தில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் இல்லத்துக்கு சனிக்கிழமை வந்த அவர், பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளின் உறவை இன்னும் மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.


இந்தப் பேச்சுக்களுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நேபாள நாட்டின் முன்னுரிமைகளின் அடிப்படையில் அந்நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான இணைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, நேபாளத்தின் ஜனநாயகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல உதவும்" என்றார்.


இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பு, வேளாண்மை, எரிசக்தி, இருநாட்டு மக்களுக்கு இடையேயான பரஸ்பர தொடர்புகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட இந்த சந்திப்பின்போது ஒப்புக் கொண்டனர்.


சர்மா ஒலி கூறும்போது, நேபாளம்-இந்தியா இடையேயான உறவை 21-ம் நூற்றாண்டில் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் இங்கு வந்துள்ளேன். இரு நாடுகளும் நம்பிக்கையின் அடிப்படையில் வலுவான நட்பு மாளிகையை கட்டமைக்கும் என்று குறிப்பிட்டார்.


தவிர, இதுபோன்ற மேலும் மூன்று சோதனைச் சாவடிகளை அமைக்க நேபாளத்திற்கு இந்தியா உதவும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மோதிஹாரி அம்லேக்கஞ்ச் பெட்ரோலியப் பொருட்கள் குழாய் திட்டத்தையும் இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர்.


முன்னதாக, ஜனாதிபதி மாளிகையில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூம், சர்மா ஒலியை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.