சென்னையை அடுத்து மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) துவங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து, வருகின்ற 12-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிடுகிறார். இதற்காக ஒரு நாள் பயணமாக 12-ந் தேதி பிரதமர் சென்னை வருகிறார். இது தொடர்பான அவரது சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.


டெல்லியில் இருந்து 12-ந் தேதி காலை 6.40 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி காலை 9.20 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். காலை 9.25 மணிக்கு அங்கிருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்கிறார். காலை 9.50 மணிக்கு மாமல்லபுரம் போய்ச்சேரும் அவர், 9.55 மணிக்கு மாமல்லபுரம் ஹெலிபேடியில் இருந்து காரில் திருவிடந்தை செல்கிறார்.


காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணி வரை திருவிடந்தையில் நடக்கும் ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார். பின்னர் நண்பகல் 12.10 மணிக்கு திருவிடந்தையில் இருந்து மாமல்லபுரம் ஹெலிபேடுக்கு வந்து, பகல் 12.15 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி 12.40 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார்.


அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து காரில் அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு சென்று அங்கு நடைபெறும் வைர விழா கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிற்பகல் 2 மணி வரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 2.05 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார்.


அதன்பிறகு அங்கிருந்து 2.25 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு டெல்லிக்கு போய்ச் சேருகிறார். பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.