டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கில் சசிதரூர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் காஷ்மீர் தொழிலதிபர் சுனந்தா புஷ்கரை மூன்றாவது மனைவியாக காதலித்து மணந்து கொண்டார்.


இதற்கிடையில் சசிதரூருக்கும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார்-க்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. இதனால் சசிதரூர் - சுனந்தா தம்பதியினர் இடையே பிரச்சணைகள் வலுக்க துவங்கியது.


இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி லீலா பேலஸில் மர்மமான முறையில் சுனந்தா சடலமாக மீட்கப்பட்டார். சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த AIIMS டாக்டர் குழு அவருடைய உடலில் விஷம் கலந்து இருப்பதாக உறுதிப்படுத்தியது. 


இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு சுனந்தாவின் குடல் பாகங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அந்நாட்டின் FBI புலனாய்வு துறை மூலம் ஆய்வக பரிசோதனையும் மேற்கொண்டது. 


அந்த பரிசோதனை முடிவில் சுனந்தாவின் உடலில் கதிரியக்க பொருட்கள் கலந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, FBI மற்றும் AIIMS மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்து இறுதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் AIIMS மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. 


இந்த குழுவானது அண்மையில் சிறப்பு விசாரணை குழுவிடம் தங்களது அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில், சுனந்தாவின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்பது பற்றி உறுதி தகவல் எதுவும் கூறப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சிறப்பு விசாரணை குழு FBI மற்றும் AIIMS மருத்துவ அறிக்கையை மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து இறுதி முடிவை அறிவிக்கும்படி மருத்துவ குழுவை கேட்டுக்கொண்டது.


இந்நிலையில் இன்று சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 


அதில் சுனந்தா தற்கொலைக்கு சசிதரூர் உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.