அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அமைதியாய் தூங்கிய சித்தராமையா!
கர்நாடகா தேர்தளை முன்னிட்டு நடைபெறும் பிரச்சாரத்தில் நிம்மதியாகத் தூங்கிய சித்தராமையா!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் பத்து நாள்களே உள்ள நிலையில் அங்கு இரு பெரும் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பிஜேபி காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகிறது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அங்கு பாஜக வெற்றிப்பெற வேண்டும் என்பதுக்காக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் தங்கியிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் பிரதமர் மோடியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.இப்படி பரபரப்பாக இருக்கும் கர்நாடகா தேர்தலில், நேற்று குல்பர்காவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஒருவர் மேடையில் மைக்கின் முன் பேசி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த சத்தத்திலும் அவ்வளவு மக்கள் முன்னிலையிலும் முதல்வர் சித்தராமையா மேடையிலேயே தூங்கிவழிந்துள்ளார்.
அவர் தூங்குவதை அருகில் இருந்த சிலர் குறிப்பிட்டு சொன்னபோதும் அதை மறைக்கும் விதமாகக் கன்னத்தில் கை வைத்து சமாளிப்பது போல் மீண்டும் தூங்கினார். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.