சந்திரயான் 2 கேமராவால் எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.


ஆனால், சந்திரயான் 2-ன் லேண்டர் விக்ரமை நிலவுப் பரப்பில் மென்மையாகத் தரையிறக்கும் முயற்சியின் போது 2 கிலோமீட்டர் தூரத்தில் சமிக்ஞை துண்டிக்கப்பட்ட போதிலும், ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது.


இந்நிலையில் ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நிலவின் தென் துருவத்தில் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, பல்வேறு பகுதிகளை அடையாளப்படுத்தி அறியும் வகையில் தெளிவான புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 100 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் 14 கிலோமீட்டர் நீளமும் 3 கிலோமீட்டர் விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி பதிவாகியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.





நிலவு ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பள்ளங்களை, தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்ள அந்தந்த ஆய்வில் தொடர்புடைய வானியலாளர்களின் பெயர்களை அந்தப் பள்ளங்களுக்கு இடுவது வழக்கம். அந்த வகையில் இந்தப் பள்ளம் ஜெர்மனிய வானியலாளரான பலோன் ஹெச் லட்விக் வான் போகஸ்லாவ்ஸ்கியின்  பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட பள்ளம் ஆகும்.


மேலும் 5 மீட்டர் மட்டுமே விட்டம் கொண்ட சிறிய பள்ளங்கள் மற்றும் 1 முதல் 2 மீட்டர் மட்டுமே உயரமுள்ள பாறைகளுடன் கூடிய நிலவின் நிலப்பரப்பு புகைப்படங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. 100 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் இருந்து மிகத் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நிலவின் இடவியல் ஆய்வில் முக்கியமான கருவி என இஸ்ரோ கூறியுள்ளது.